அதிமுக + காங்கிரஸ் + விசிக + கமல்.. எடப்பாடியின் மெகா கணக்கு.. பாஜக கையில் "லாலிபாப்".. விளாசும் மணி
சென்னை: அதிமுக + காங்கிரஸ் + விசிக கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி முயன்று கொண்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கி வைத்தது என்னவோ எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் இந்த விவாதம் நடக்க காரணம்.
நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.
இந்த நிலையில் எடப்பாடி தலைமையில் மெகா கூட்டணி அமையுமா என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் பின்வருமாறு..

விஜயபாஸ்கர் விசாரணை
கேள்வி: எடப்பாடிக்கு நெருக்கமான விஜயபாஸ்கர் போன்றவர்களை சிபிஐ குறி வைத்து உள்ளதே.. எடப்பாடிக்கு எதிராக பாஜக அழுத்தம் கொடுக்கிறதா?
பதில்: பாஜகவை கழற்றிவிட எடப்பாடி விரும்புகிறார். பாஜகவை தமிழக மக்களுக்கு பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட பாஜகவோடு இருப்பதை எடப்பாடி விரும்பவில்லை. தமிழ்நாடு ஆண்டி பாஜக நிலைப்பாடுதான் உள்ளது. மக்களின் இந்த நிலைப்பாடு காரணமாக எடப்பாடி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நினைக்கிறார். பாஜக கூட்டணியில் இல்லாமல் இருந்திருந்தால் 90 இடங்கள் வரை வென்று இருக்க முடியும். கடந்த சட்டசபை தேர்தலில் வென்று இருக்க முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். அது எடப்பாடியின் கனவு, அது ஓரளவிற்கு நியாயமானது கூட.

2024 பிளான்
இப்போது பாஜகவை கழற்றிவிட்டால்தான் 2024ல் குறைந்தபட்சம் களத்தில் வலிமையாக இருக்க முடியும். எம்பி சீட்களை பெற முடியும். அப்போதுதான் 2026ல் ஆட்சியை பிடிக்க முடியும். பாஜக கூட்டணியில் இருந்தால் இது நடக்காது. திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. 2026ல் இதன் மூலம் அதிமுக ஆட்சிக்கு வர முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். இதற்கு பாஜகவுடன் கூட்டணியில் இருக்க கூடாது என்று எடப்பாடி நம்புகிறார். பாஜகவை தோளில் சுமப்பது தேவையற்றது என்று நினைக்கிறார். இதற்காக பாஜகவை கழற்றிவிட பார்க்கிறார்.

ஒப்புக்கொள்ளாது
ஆனால் பாஜக இதற்கு சுத்தமாக ஒப்புக்கொள்ளாது. 3 சதவிகித வாக்குகளை வைத்து இருக்கும் பாஜக 30 சதவிகித வாக்குகளை வைத்து இருக்கும் அதிமுகவின் தோளில் பயணம் செய்ய விரும்புகிறது. இதனால் எடப்பாடி கூட்டணி உடைப்பதை பாஜக அனுமதிக்காது. எடப்பாடியை எப்படி முடக்க வேண்டுமோ முடக்கும். அது பன்முனை தாக்குதல்களாக இருக்கும். எடப்பாடியின் ஆதரவாளர்களே அவருக்கு எதிராக திரும்புவார்கள். ஓபிஎஸ் போன்றவர்களும் இன்னொரு பக்கம் எடப்பாடியை எதிர்ப்பார்கள். அதேபோல் மத்திய விசாரணை ஆணையங்களையும் ஏவி விடுவார்கள். அவர்களின் கொடும் கரங்கள் எடப்பாடியை நோக்கி நீளும்.

மெசேஜ்
ஓ பன்னீர்செல்வத்தை குஜராத்திற்கு அழைத்தது ஒரு மெசேஜ். எடப்பாடியை ஜி 20 க்கு கூப்பிட்டோம்.. இவரை குஜராத்திற்கு கூப்பிட்டோம். இருவரும் ஒன்றாக இருங்கள் என்று டெல்லி சொல்லி இருக்கிறது. இரண்டு பேரும் எங்களுக்கு தேவை. இரட்டை தலைமை தேவை. அதனால் இரண்டு பேருமே ஒற்றுமையாக இருங்கள் என்று பாஜக சொல்லி உள்ளது. இதை ஓ பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு இல்லை என்பதால் கேட்டுக்கொள்வார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இதை கேட்பது இல்லை.

மெகா கூட்டணி
கேள்வி: எடப்பாடி பழனிசாமி சொன்ன மெகா கூட்டணி நடக்கும் வாய்ப்புகள் உள்ளதா?
பதில்: அரசியலில் எதுவும் சாத்தியம்தான். இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. இது மிக மிக நீண்ட காலம். இந்த நீண்ட காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பாஜகவுடன் இப்போது பாமக இருக்கிறது. எடப்பாடியின் அதிமுக இருக்கிறது. இதோடு ஓ பன்னீர்செல்வத்தை இழுக்க வேண்டும், தேமுதிக வர வேண்டும், டிடிவி தினகரன் வர வேண்டும். மக்கள் நீதி மய்யம் வர வேண்டும். இவர்கள் எல்லாம் வந்தால் அதிமுக மெகா கூட்டணியாக இருக்கும். இருந்தால் அந்த கூட்டணி வெறும் கலர்புல் கூட்டணிதான். யாரும் அங்கே வலிமையான கட்சிகள் கிடையாது. இந்த கூட்டணியில் அதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ளது. பாமக, பாஜகவிற்கு கொஞ்சம் வாக்கு வாங்கி உள்ளது. மற்றவர்களுக்கு வாக்கு வாங்கி இல்லை. ஆனால் திமுகவில் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்ற பன்முகக்கொள்கை கொண்ட கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் கூட்டணி
அதிமுகவில் அப்படி இல்லை. எடப்பாடி நினைக்கும் மெகா கூட்டணி என்பது வேறு. அவர் பாஜகவை கழற்றிவிட பார்க்கிறார். பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு காங்கிரசுடன் இணைய நினைக்கிறார். காங்கிரசுடன் இணைந்தால் விசிக, கம்யூனிஸ்ட் தங்கள் பக்கம் வருவார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். இவர்களோடு பாமக, மக்கள் நீதி மய்யம் சேர்ந்தால் வெற்றிபெற முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால் பாஜக இதற்கு விடாது. பாஜக இதை ஒன்று லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்காது. எடப்பாடி போவதை பாஜக வேடிக்கை பார்க்காது. இப்படி ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடியின் ஆசை. ஆனால் அதற்கு பாஜக விடாது. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக எடப்பாடி இருந்தால் அவரின் சொந்த கட்சியினரே எடப்பாடியை கழற்றிவிட்டுவிடுவார்கள். பாஜகவை எதிர்ப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

திமுகவிற்கு சிக்கல்
கேள்வி: எடப்பாடி கூட்டணி தயார் ஆனாலும்.. காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுமா?
பதில்: அதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மி. சோனியா, ராகுல் - ஸ்டாலின் இடையே உள்ள உறவு என்பது நெருக்கமானது. காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட் அடுத்த தேர்தலில் கொடுத்தால் கூட திமுக கூட்டணியில்தான் அவர்கள் இருப்பார்கள். ஸ்டாலினும் கூட்டணியை முறிக்க விரும்ப மாட்டார்கள். காங்கிரஸ் கூட்டணியை திமுக முறித்தால், அடுத்த திமுக + பாஜக கூட்டணி என்ற பேச்சு உருவாகிவிடும். இதை திமுகவே விரும்பாது. திமுக + பாஜக கூட்டணி என்ற விவாதத்தையே திமுக விரும்பாது. சிறுபான்மையினரை வாக்குகள் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் காங்கிரஸ் கட்சியை திமுக பகைத்துக்கொள்ளாது. திமுக மீதான நம்பகத்தன்மை சிதைக்க கூடாது என்பதால் கண்டிப்பாக 2024 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை திமுக முறிக்காது என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications