ஈரோடு கிழக்கில் தோற்றால்.. அதிமுக ஆபிஸ் சாவியை ஓபிஎஸ் காலடியில் எடப்பாடி வைத்துவிடணும்.. புகழேந்தி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி கருத்து
சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுகவை ஓ பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூர் புகழேந்தி. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சட்ட ரீதியில் தேவையான உதவிகளையும் அவர் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா, தினகரன் ஆதரவாளராக இருந்தார். இதையடுத்து தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மீண்டும் அதிமுகவுக்கே வந்துவிட்டார். அப்போது ஒரு விவாதத்தில் கூட்டணி கட்சியான பாமக குறித்து பேசியிருந்தார்.

பாமக
இதற்கு பாமகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த புகழேந்தி அதிமுகவில் ஒற்றைத் தலைமை வெடித்த போது ஓபிஎஸ் பக்கம் வந்துவிட்டார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்ஸுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தக்க பதிலடிகளையும் கொடுத்து வருகிறார். அவர் டிஜிபி அலுவலகத்தில் நேற்றைய தினம் ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. பாஜகவுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருப்பதாக எங்களை பற்றி அவதூறாக தெரிவிக்கிறார்கள்.

மோடியிடம் கவுரவம்
பிரதமர் மோடியிடம் நாங்கள் கவுரவமாக உள்ளோம். எனவேதான் பாஜகவுடன் நல்லுறவோடு இருக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் நடந்தவர்கள் நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது. இதன் பேரில்தான் ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளோம்.

அவைத் தலைவர்
அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சரியாக நடந்து கொள்ளவில்லை. ஏற்கெனவே நடந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் இரட்டை இலை வைத்து 90 சதவீத இடங்களில் தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை வைத்து கட்சியை நாசம் செய்து விட்டார்களள். ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வென்றால் அதிமுக அலுவலக சாவியை ஓபிஎஸ் காலடியில் ஒப்படைக்க வேண்டும் என்றும் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார். பேஸ்புக்கில் தான் இறந்துவிட்டதாக போஸ்டர் இருந்ததை அடுத்து அதுகுறித்து புகார் தெரிவிக்கவே டிஜிபி அலுவலகம் வந்ததாக புகழேந்தி தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்
இந்த பேட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை புகழேந்தி கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிவித்த நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் இல்லை. எனினும் நாங்கள் இரட்டை இலைக்காக வாக்கு கேட்போம் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ, இவர்கள் வந்து ஓட்டு கேட்க வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. இவர்கள் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். எனவே இரட்டை இலைக்கு வாக்கு கேட்க இவர்கள் யார், இவர்களைத்தான் கட்சியிலிருந்து நீக்கிவிட்டோமே என்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றால் அது எடப்பாடி பழனிசாமி எனும் ஒற்றைத் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படும்.












Click it and Unblock the Notifications