2 பேருக்கும் சிக்னல்.. இதென்ன கதை? தகிக்கும் பாஜக அதிமுக மோதல்.. அண்ணாமலை மீது அப்செட்டில் ஈபிஎஸ்!
அண்ணாமலையின் செயல்பாடு எடப்பாடி பழனிசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
சென்னை : அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில், பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து அண்ணாமலையின் கண்ணசைவோடு செய்த சம்பவங்கள் அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை 4 மணி நேரத்திலேயே ரத்து செய்யப்பட்டது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சஸ்பெண்டுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை ரத்து செய்யவும் அண்ணாமலை ஒப்புதல் கொடுத்தது ஏன் என பாஜகவினரே தலையைச் சொறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக - அதிமுக
பாஜக தகவல் தொழில் நுட்ப அணித் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த நிலையில், அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனைக் கண்டித்து கடந்த மார்ச் 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்த சம்பவம் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுகவினர் அதிர்ச்சி
பாஜகவினரின் செயலுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்தவர்கள் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கையை அண்ணாமலை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜூ வலியுறுத்தி இருந்தார். எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈபிஎஸ் அணியினர் வலியுறுத்திய நிலையில் ஈபிஎஸ் உருவப்படத்தை எரித்தவர் கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக நிர்வாகி சஸ்பெண்ட்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் வெளியிட்டிருந்த அறிவிப்பில் "மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாஜகவின் குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி 6 மாத காலத்திற்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடவடிக்கை ரத்து
அடுத்த 4 மணி நேரத்திலேயே இன்னொரு அறிக்கை வெளிவந்தது. பாஜக மாநில பொதுச்செயலாளரும், கன்னியாகுமரி பெருங்கோட்ட பெறுப்பாளருமான பொன்.பாலகணபதி பெயரில் வெளியான அறிக்கையில், 'தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டது.

இருவருக்கும் கண்ணசைவு
பாஜக கட்சி விதிப்படி, கட்சி நிர்வாகிகள் மீது புகார் வந்தால் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பி, விசாரிக்கப்பட்டு அதன் முடிவைப் பெற்றே நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். அதேசமயம், அவசர சூழல் ஏற்பட்டால் மாநில தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாவட்ட தலைவரே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாமாம். அந்தவகையிலேயே மாவட்ட தலைவர் வெங்கடேசன், அண்ணாமலையின் ஒப்புதலைப் பெற்று அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

4 மணி நேரத்திலேயே
அடுத்து என்ன அழுத்தம் ஏற்பட்டதோ, பெருங்கோட்டப் பொறுப்பாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டார். இதுவும் அண்ணாமலையின் ஒப்புதலுக்குப் பிறகுதானாம். தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட அடுத்த 4 மணி நேரத்திலேயே, கன்னியாகுமரி பெருங்கோட்டப் பொறுப்பாளர் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். என்ன கதை இது, சஸ்பெண்டுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டு, அதனை ரத்து செய்யவும் அண்ணாமலை ஒப்புதல் கொடுத்தது ஏன் என பாஜகவினரே தலையைச் சொறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொந்தளிப்பு
இது ஒருபுறமென்றால், இது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என பாஜகவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால் நாடு தாங்காது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அட்டாக் செய்தார். ஏற்கனவே, அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி இடையே லேசான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாஜகவின் இந்த செயல் மேலும் ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications