மண்டல பொறுப்பாளர்களாக முக்கிய தலைகள்.. கண்ணைக் காட்டினா ‘மா.செ’ காலி.. ஆட்டத்தை சூடாக்கும் எடப்பாடி!
சென்னை : அதிமுகவில் மண்டல பொறுப்பாளர்களை நியமித்து, மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை பணிகளை கண்காணிக்கவும், அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் மீது ஆக்ஷன் எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவுடன் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த ஓபிஎஸ் தரப்பை டெல்லியும் கைவிட்டு எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வம் செல்லும் இடமெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தான் வெற்றி கிடைத்து வருகிறது.

பலம் பெற்ற எடப்பாடி : அண்மையில் அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு டெல்லி சென்ற எடப்பாடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசித்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். இந்தச் சந்திப்பின்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வியூகங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.
அப்போது, அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் ஒற்றுமையாக இருந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும், அதை ஈபிஎஸ் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுக வலுவாகவே இருப்பதாகவும், தினகரன், ஓபிஎஸ் பக்கம் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தம் பக்கம் சேர்ந்து வருவதாகவும் அமித் ஷாவிடம் கூறியிருக்கிறாராம் ஈபிஎஸ்.
கட்சிப் பணிகள் தீவிரம் : டெல்லி சென்று வந்த கையோடு, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. உட்கட்சித் தேர்தல் நடத்தி பொதுக்குழுவை கூட்டி தொடர்ந்து பெரியளவில் மாநாடு நடத்தவும் எடப்பாடி திட்டமிட்டு வருகிறார். முன்னதாக கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
கட்சியின் அஸ்திவாரமாக உள்ள பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுகவினர் மும்முரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்த கட்சியினருக்கு உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகளும் அதன்படியே உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நாளை முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுகவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பெரிய நெருக்கடி கொடுக்கும் வகையில், அதிமுகவின் ஐடி விங்கை பலப்படுத்த புதிய நிர்வாகிகளை நியமித்து அதற்காக சென்னையில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் அணியை பலப்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க இளம்பெண்கள், இளைஞர் பாசறை புதுப்பிக்கப்பட இருக்கிறது.
மண்டல பொறுப்பாளர்கள் : மேலும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், விழுப்புரம் என்று ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட இருக்கிறது. இந்த ஆறு மண்டலங்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களின் தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் கண்காணிக்கப்பட இருப்பதாகவும், அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் சரிவர செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட இருப்பதாகவும் ஒரு தகவல் அதிமுக வட்டாரத்தில் உலவுகிறது.
கட்சியில் சீனியர்களாக இருக்கும் மாவட்ட செயலாளர்கள் பலரிடம் தன்னால் உத்தரவு போட்டு வேலை வாங்க முடியவில்லை எடப்பாடி பழனிசாமி பொறுமலில் இருக்கிறாராம். இதனால் மா.செக்கள் பலர் மாற்றப்படலாம், பொதுச் செயலாளர் ஆன பிறகு அதிரடி தொடங்கும் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது பொதுச் செயலாளர் ஆன கையோடு அந்த வேலையில் இறங்க உள்ளாராம் ஈபிஎஸ்.












Click it and Unblock the Notifications