கூட்டணி ஆட்சி.. பாஜக இப்படி சொல்வதற்குக் காரணம் இதுதான்.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்!
சென்னை: தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என்று பாஜக பேசி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைக்கப்பட்ட மேடை தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்பதைத் தெளிவாக கூறி வருகிறார். அமித்ஷாவின் வார்த்தைகளையே அக்கட்சி நிர்வாகிகளும் தொடர்ச்சியாக மக்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர்.

ஆனால் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக இதுவரை ஏற்கவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுகவைக் கபளீகரம் செய்ய எந்த கொம்பனாலும் முடியாது என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு பாஜகவுக்கான பதிலடியாகப் பார்க்கப்பட்டது.
தொடர்ந்து திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கிறது அதிமுக என்று பேசி வருகிறார்கள்.. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல.. அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம் என்று பேசி இருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு பாஜக உடனான கூட்டணியை முறிக்க முடிவு எடுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடைசி நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்து, அதிமுக - தவெக கூட்டணி முடிவாகும் என்ற பேச்சுகள் தொடங்கின. இந்த நிலையில் பாஜக தரப்பில் கூட்டணி ஆட்சி என்று பேசி வருவதற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமியே கூறி இருக்கிறார்.
இந்து ஆங்கில நாளிதழுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டியில், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணிக் கட்சிகள் கூறி வந்ததற்கு பதில் அளிக்கவே அப்படிப் பேசினேன்.
அதேபோல் தனது கட்சி தொண்டர்கள் உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என்று பாஜக கூறி வருகிறது. ஒற்றைக் கட்சி ஆட்சியையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சியில் பங்கு என்பதனை தமிழ்நாட்டு மக்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருப்பது பாஜக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications