டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! “திமுக அரசின் சதி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி”-எடப்பாடி பழனிசாமி அட்டாக்
சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வரவேற்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த அறிவிப்பு மூலம் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது x தளத்தில், “மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் டங்ஸ்டன் தடுப்போம், மேலூர்காப்போம் என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் விடியா திமுக-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த திராவிட மாடல் திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.
டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக டிச.9ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, “சுரங்க அனுமதியை ரத்து செய்ய முதல்வர் கடிதம் எழுதியதாக சொல்கிறார்கள். ஆனால் கடிதத்தில் என்ன எழுதினார்கள், எதை வலியுறுத்தினாரகள் என்பது குறித்த எந்த தகவலும் வெளியில் பகிரப்படவில்லை.
மட்டுமல்லாது, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இது குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தபோது திமுக எம்பிக்கள் இதை தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் 10 மாதங்கள் வரை இந்த அரசு அமைதியாக இருந்திருக்கிறது. 10 மாதங்கள் வரை அமைதியாக இருந்ததற்கு பதில், ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோதே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தால் இந்நேரம் இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications