"பெரிய மீன்களுக்கு தூண்டில்”.. தினகரனுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் எடப்பாடி.. முழுவேகத்தில் ஆபரேஷன் அமமுக!
அமமுகவை பஞ்சர் ஆக்கி, தினகரனுக்கு செக் வைக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சென்னை : ஒருபக்கம் பாஜக நிர்வாகிகளை கொத்தாக தூக்கிய எடப்பாடி பழனிசாமி, அமமுகவில் தூண்டில் போட்டு முக்கிய புள்ளிகளை தூக்கி வருவதால் டிடிவி தினகரன் அப்செட் ஆகியுள்ளாராம். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, இந்த வேட்டையை தீவிரப்படுத்த ஆர்டர் போட்டிருக்கிறாராம்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
அதிமுகவை பலப்படுத்த, அமமுக நிர்வாகிகளை தாய்க் கழகத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் தன் தரப்பை பலப்படுத்த அமமுக நிர்வாகிகளை தம் அணிக்கு இழுக்க மாஜிக்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்தார் ஈபிஎஸ்.

பாஜக + அமமுக
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜகவில் இருந்தே முக்கிய பிரமுகர்களை எடப்பாடி பழனிசாமி தம் கட்சிக்கு இழுத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக ஐடி விங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல்குமார், செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பாஜகவில் இருந்து அதிமுகவிற்குத் தாவினர். இதனால், அதிமுக பாஜக இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பாஜக பிரமுகர்களை தொடர்ந்து அமமுக முக்கிய பிரமுகர்களை அடுத்தடுத்து அதிமுகவிற்கு தூக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

தினகரன் காட்டம்
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். மேற்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியால், ஈரோடு கிழக்கில் ஏன் வெற்றிபெற முடியவில்லை. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி இருந்தும்கூட காங்கிரஸ் கட்சியால் எப்படி 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது? எடப்பாடியிடம் பணபலம் இருக்கிறது, இரட்டை இலைச் சின்னம் இருக்கிறது. இருந்தும் இப்படி என்றால் இல்லாவிட்டால் இன்னும் மோசமாகியிருக்கும் என்று விமர்சித்திருந்தார்.

ஏர்போர்ட் சம்பவம்
இப்படியான சூழலில், கடந்த 11ஆம் தேதி சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அவருடன் விமான நிலைய பேருந்தில் ஒன்றாகப் பயணித்த அமமுக நிர்வாகியான ராஜேஸ்வரன் என்பவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் போட்டார். இது கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் வந்தவர்கள் ராஜேஸ்வரனை தாக்கி, அவரது செல்போனை பறித்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கையில்
இந்தச் சம்பவம் ஒருபுறமிருக்க, அங்கிருந்த சிவகங்கை மாவட்டத்திற்குக் கிளம்பிய எடப்பாடி பழனிசாமி, சிங்கம்புணரி அருகே குன்னத்தூரில் அதிமுக மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன் அளித்த விருந்தில் பங்கேற்றுவிட்டு பின்னர் திருப்பத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் நிர்வாகிகளுடன் பேசினார். பின்னர் அவர் சிவகங்கைக்குச் சென்ற நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவனும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். இதையடுத்து அடுத்த நாளே சென்னைக்குச் சென்று அதிமுகவில் இணைந்தார் கே.கே.உமாதேவன்.

கே.கே.உமாதேவன்
அமமுக தலைமை நிலைய செயலாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு, பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அமமுக முக்கிய நிர்வாகிகள்
இவர்களைத் தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதேபோல அமமுக வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளரும் வத்திராயிருப்பு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான அழகர்சாமி, அமமுக மாவட்ட துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி முருகேசன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

சத்தமில்லாமல்
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் செல்வாக்கைச் சரிக்க ஆர்பி உதயகுமார் மூலம் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை என்பதில் ஈபிஎஸ் அப்செட்டில் இருந்தார். இந்த நிலையில் தான், அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அமமுகவினரை வளைக்கும் ஆபரேஷனை நடத்த உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் தான் சத்தமில்லாமல் காய் நகர்த்தி அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர் ஈபிஎஸ் அணியினர்.

தினகரன் அப்செட்
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி.சண்முகம் முயற்சியில், அமமுக மாவட்டச் செயலாளர்கள் ஆர்.பாலசுந்தரம், ஆர்.அய்யனார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மாநில நிர்வாகிகள் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் பலரையும் இழுப்பதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாம். இதனால், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமமுக பஞ்சர்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், ஓபிஎஸுக்கு ஆதரவளித்து, பாஜக கூட்டணிக்கு தயாராகி வந்தார் டிடிவி தினகரன். இந்த நேரத்தில் அமமுக முக்கிய நிர்வாகிகளை இழந்திருப்பது தினகரனுக்கு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மற்ற மாவட்டங்களிலும், அமமுகவினரை இழுக்கும் ஆபரேஷனை தீவிரப்படுத்த ஈபிஎஸ் உத்தரவிட்டிருக்கிறாராம். அமமுகவை கூட்டணியில் சேர்க்க பாஜக நிர்ப்பந்தித்து வருவதாகச் சொல்லப்படும் சூழலில், அமமுகவை பஞ்சராக்கி, அக்கட்சியை கழற்றி விட்டு விடவேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications