எஸ்பி கலெக்டருக்கே மிரட்டல்! ஸ்டாலின் நடத்தும் மன்னராட்சி.. குறுநில மன்னர்களாக மா.செ.! விடாத இபிஎஸ்
சென்னை: திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதன் எடுத்துக்காட்டுதான் இது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் வியாழக்கிழமை தருமபுரியில் நடைபெற்ற அந்த கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாக தான் ஒரு ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதில் பேசியுள்ள அவர்," நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆட்களை மாற்ற முடியாது. நான் கடிதம் கொடுத்தால்தான் மாற்ற முடியும்.
அதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கலெக்டர், எஸ்.பி., அதற்கு கீழ் உள்ள அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன். எந்த அதிகாரியும் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது. விளையாடுவதற்கு இது இடமல்ல.
என்னிடம் விளையாட முடியாது. அப்படி விளையாடினால் அவன் கதை முடிந்தது. தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரியும். அதிகாரி யாரும் என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் லெட்டர்பேடில் எனக்கு கடிதம் கொடு என்று தலைவர் சொல்லியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் உள்பட. பிடிஓ அலுவலகத்தில் நடைபெறும் ஏ டு இசட் அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு முன்னால் இருந்தவர்கள் எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால், இனி இப்படிதான்" என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உட்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன.
தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது.
ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications