சிங்கப் பாதையை தேர்ந்தெடுத்த எடப்பாடி.. ஓபிஎஸ் ஆஃபருக்கு “நோ”! ஒரே குறிக்கோளில் உறுதி
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன் 2 வாய்ப்புகளே இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் சிங்கப் பாதையை தேர்வு செய்துள்ளார்.
Recommended Video
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நேற்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் பழைய நிலை
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காலமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இரண்டே வழி
இந்த நிலையில் இனி அதிமுகவில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட எடப்பாடி பழப் இரண்டே வழிகள்தான் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலை ஏற்று பொதுக்குழுவை கூட்டி தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரத்தை மீட்கலாம் என்றும், அல்லது உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு முடிவுகளை செல்லுபடியாக்க முயற்சிக்கலாம் என்றும் நேற்று நாம் கூறி இருந்தோம்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் பயணித்தால் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது. அதிமுக ஒன்றுபட்ட போது அதை யாராலும் வீழ்த்த இயலவில்லை. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட விரும்புகிறார்கள். அதிமுகவில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டும்." என்று கூறினார்.

எடப்பாடியின் சிங்கப்பாதை
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அழைப்பை ஏற்க மறுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்று நாம் தெரிவித்த 2 வாய்ப்புகளில் சிங்கப்பாதையை அவர் தேர்வு செய்து இருக்கிறார். அதாவது உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். ஓபிஎஸ் அழைப்பு குறித்து பேட்டியளித்த எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் அவர் திமுகவுடன் உறவு வைத்திருப்பதாகவும், பொதுக்குழுவில் செல்வாக்கை காட்டி தொண்டர்கள் ஆதரவு இருப்பதை ஓபிஎஸ் நிரூபிக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications