40 ரயில்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி.. தற்காலிக சிரமம், சிறந்த எழும்பூராக மாறும்.. ரயில்வே விளக்கம்
சென்னை: சென்னையின் போக்குவரத்து உயிர்நாடியான புறநகர் மின்சார ரயில் சேவையில் 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்றைய தற்காலிக சிரமம், நாளைய சிறந்த எழும்பூராக மாறும் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் மின்சார ரயில் சேவை போக்குவரத்திற்கு இன்றியமையாத சேவையாக இருந்து வருகிறது. சென்னை தாம்பரம் வழித்தடத்தில் பீக் நேரங்களில் சில நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டாலே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும்.

40 ரயில் சேவைகள் ரத்து
இந்த நிலையில் தான் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தினை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே மேற்கொண்டுள்ளது. இதற்காக நேற்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு 40 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வரும் 40 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நின்று செல்லும் புறநகர் ரயில்கள், இந்த நாட்களில் 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. நேற்று முதல் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் போதிய ரயில்கள் இல்லாமல் கிண்டி ரயில் நிலையத்தில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
பயணிகள் கடும் அவதி
தொடர்ந்து 20 நிமிடங்கள் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில் தெற்கு ரயில் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் மனமாரக் கேட்டுக்கொள்கிறது. இந்த முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை செங்கல்பட்டு பிரிவில் சில புறநகர் ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளது.
தவறான தகவல்கள் பரவி வருகின்றன
இந்நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டவை ஆகும்; திட்டமிட்ட காலக்கெடுவில் பாதுகாப்பாகவும் திறம்படவும் பணிகளை நிறைவேற்றுவதற்காக அவை அவசியமானவை. இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் நோக்கம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய பயணிகள் நட்பு நிலையமாக மாற்றுவதாகும், மேம்பட்ட வசதிகள், உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
இத்தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனினும், தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்க இவை அவசியமானவை. சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
பாதுகாப்பான வசதியான பயண அனுபவம்
குறிப்பாக, செயல்பாட்டு தோல்வி அல்லது பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் குறித்த தவறான தகவல்கள் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும். அனைத்து ரயில் இயக்கங்களும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
பயணிகள் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் செயல்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனர்.
பயணிகள் அனைவரும் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பும் புரிதலும் உடன், இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, அனைவருக்கும் பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் வசதியான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.












Click it and Unblock the Notifications