EDஅலுவலகத்திற்கு காரில் சென்ற பொன்முடி.. சிக்னலில் நின்ற போது முதியவரால் நடந்த பரபரப்பு சம்பவம்
சென்னை: சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டபோது சிக்னலில் நின்ற பொன்முடியின் கார் டிரைவரிடம் ரூ 10 பேனாவை முதியவர் விற்க முயன்ற சம்பவம் நடந்தது.
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமான அளவு செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரத்தில் உள்ள எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரியும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை இந்த வழக்கு தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்தது.
இதையடுத்து நேற்று காலை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அது போல் அவருடைய மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் இந்த ரெய்டு நடந்தது.
சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து பொன்முடியை அவரது சொந்த காரிலேயே அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சைதாப்பேட்டை டூ நுங்கம்பாக்கம் போன போது சிக்னலில் கார் நின்றது. அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் ரூ 10 க்கு பேனா தருவதாக கூறி பொன்முடியின் ஓட்டுநரிடம் விற்பனை செய்ய முயன்றார். அவர் வேண்டாம் என கூறவே சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அடுத்த வண்டி ஓனரிடம் பேனா விற்பனை செய்ய அந்த முதியவர் சென்றுவிட்டார்.
அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் அவரிடம் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் அவர் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராவார். முன்னதாக பொன்முடி வீட்டில் மூத்த அமைச்சர்களும் வழக்கறிஞர்களும் ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications