முதல்வர் குறித்து அவதூறு.. ஆ. ராசாவிற்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள திமுக எம்பி ஆ.ராசாவிற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக திமுக எம்பி ஆ. ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் முதல்வர் பழனிசாமியையும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு ஆ. ராசா பேசினார்.

ஆ. ராசா தனது பேச்சில் முதல்வரை விமர்சிக்கும் வகையில் சில விஷயங்களை குறிப்பிட்டார். இதில் சில கருத்துக்கள் வரம்பு மீறி சென்றதாக புகார் வைக்கப்பட்டது. இணையத்தில் ஆ. ராசாவின் பேச்சுக்கள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆ. ராசாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேர்தல் ஆணையத்தில் இவருக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது, அ.தி.மு.க. சார்பில் தமிழக தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஆ. ராசாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் தேர்தல் ஆணையத்திடம் ஆ. ராசா நேற்று விளக்கம் அளித்தார். அதில், முதல்வர் கண்கலங்கியது அறிந்து மன்னிப்பு கோரியுள்ளேன். அவரை குறித்து அவதூறு பேசவில்லை.
உவமானம் என்ற முறையிலேயே ஸ்டாலின் மற்றும் பழனிசாமியை ஒப்பிட்டு பேசினேன். நான் பேசிய முழு வீடியோவை கேட்டால் உங்களுக்கு புரியும் என்று விளக்கம் அளித்து இருந்தார். இந்த விளக்கத்தை தொடர்ந்து தற்போது ராசா பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள ஆ.ராசாவிற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆ. ராசா கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இந்த தடை உடனே அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது,












Click it and Unblock the Notifications