வில்லங்க சான்றிதழ்.. சொந்த வீடு கட்ட கடன் வாங்கனீங்களா? பதிவுத்துறையில் புது வசதி.. குஷியில் வங்கிகள்
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை தமிழக பதிவுத்துறை மேற்கொண்டு வரும்நிலையில், புதிய வசதி ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இது மக்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி அதிகாரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
பொதுமக்கள் தங்களது ஆவணப் பதிவு தொடர்பான தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக பதிவுத்துறை சார்பில் 176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான "ஸ்டார் 2.0" என்ற திட்டமாகும். இதற்காகவே மேம்படுத்தப்பட்ட www.tnreginet.gov.in என்ற இணையதளமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வசதிகள்: இத்திட்டத்தின் மூலம், எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் தாங்களாகவே இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணையவழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து ஒரே வருகையில் திரும்ப வழங்கும் வசதி, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவிக்கும் வசதி, இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட அனைத்துமே செயல்படுத்தப்படுகிறது.
வழக்கமாக, சொந்தமாக வீடு வாங்குவோர், வங்கிகளில் கடனை பெறுவார்கள்.. வீடு கட்டுவதை தவிர, தொழில், வர்த்தக பணிகளுக்கும் இதுபோன்ற கடன்களை வங்கிகளில் வாங்க நேரிடும்.. இப்படி கடன் வாங்கும்போது, தங்களிடம் உள்ள சொத்தின் அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைப்பார்கள்..
கடன் வசதி: கடன் முடியும் வரை, அசல் ஆவணங்கள் இந்த வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். கடன் தவணை முடிந்ததுமே, வங்கியின் சார்பில் உரிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கே நேரடியாக சென்று அசல் ஆவணங்களை ஒப்படைக்க எம்டிஓ (Memorandum of Deposit ) பத்திரத்தை முடிக்க வேண்டும்.
ஆனால், சொத்து பரிமாற்றம் தொடர்பாக, எந்த சரி பார்ப்பும் தேவைப்படாது என்பதால், வங்கி அதிகாரிகள், தங்கள் அலுவலகத்திலிருந்தபடியே ஆன்லைனில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று புதிய நடைமுறைக்கான அரசாணை கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறைதான் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.. ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் - 2.0' சாப்ட்வேரிலேயே இதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
வங்கி அதிகாரிகள்: இதன்படி, வங்கி அதிகாரிகள் நேரில் வராமல், பதிவுத்துறை இணையதளத்தில், தங்கள் பெயரில் கணக்கு துவங்கி, அதில் உரிய விபரங்களை உள்ளீடு செய்து, கட்டணத்தையும் ஆன்லைன் வழியே செலுத்தினால் போதும்... அந்த விபரங்கள் அனைத்தும் சொத்தின் வில்லங்க சான்றிதழில் பதிவேற்றப்படும்...
வங்கி அதிகாரிகளுக்கு, இந்த புதிய எம்டிஓ (Memorandum of Deposit )வசதியானது மிகுந்த பலனை தந்து வருவதுடன், நேரமும் மிச்சப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. அதேபோல, இந்த புதிய வசதி குறித்து, பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற பரவலான கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications