உச்சக்கட்ட பரபரப்பில் சென்னை.. ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு! டார்கெட் யாரு?
சென்னை: ஒரே நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர் கதையாக மாறி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை குறி வைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இப்படி வாரத்துக்கு ஒரு முறையாவது அமலாக்கத் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவது வாடிக்கையாக மாறி இருக்கிறது.

அந்த வகையில் தான் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் இறங்கி இருக்கிறார்கள். இன்று காலை முதல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்து இருக்கும் கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேபோன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் அமைந்து உள்ள ஜெயின் வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோன்று அதே பகுதியில் உள்ள டி.வி.ஹெச் லும்பானி என்ற அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியிருப்பின் 4 வது மாடியில் வசித்து வரும் அரசு ஒப்பந்தங்களுக்கு மின் சாதனங்களை விநியோகம் செய்யும் அமித் என்பவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தொடர்ந்து வரும் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் வருமான வரித்துறை சோதனை மற்றும் அமலாக்கத் துறை சோதனையின் பின்னணி என்ன? யாரை குறி வைத்து இந்த சோதனைகள் நடைபெறுகின்றன என்ற கேள்வி எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications