செந்தில்பாலாஜி சிகிச்சை பெறுவதை டிலே செய்வதே அமலாக்க பிரிவின் நோக்கம்: திமுக வழக்கறிஞர் பரபர புகார்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதை தாமதப்படுத்துவதே அமலாக்கத்துறையின் நோக்கமாக உள்ளது என்று திமுக வழக்கறிஞர் சரவணன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். செந்தில் பாலாஜி இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம், கைது நேரம் உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் விசாரித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் செந்தில் பாலாஜிக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அமலாக்கத்துறை, தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் ரிப்போர்ட்டில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், ஆட்கொணர்வு மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்றைய விசாரணை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை, "அமலாக்கத்துறை சரியான நடைமுறையை பின்பற்றாததன் காரணமாக அந்த ரிமாண்டை தள்ளி வைக்கும் அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களிடம் முறைப்படி தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர் என்ற வாதத்தை நீதிபதிகளிடம் முன்வைத்தோம்.
அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நாங்கள் போன் செய்தோம், போனை எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்பினோம் என்றார்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து கையெழுத்து வாங்க வேண்டும், எந்த காரணத்திற்காக கைது செய்கிறோம் என குற்றம்சாட்டப்பட்டவரிடம் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும். இது எதையுமே அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்யவில்லை.
மற்ற விஷயங்களை விட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பது முதன்மையானது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் காலம் தாழ்த்த வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் நோக்கமாக இருக்கிறது. நேற்று அமலாக்கத்துறை சொன்ன அறிவுறுத்தலின் அடிப்படையில் தான் இஎஸ்ஐ மருத்துவர்கள் வந்து பரிசோதித்தனர். இஎஸ்ஐ மருத்துவர்களின் அறிக்கையை ஏற்கவே அமலாக்கத்துறை மறுக்கிறது. இஎஸ்ஐ மருத்துவர்கள் தங்களுக்கு சாதகமான ரிப்போர்ட்டை தரவில்லை என்பதால் அதனையே ஏற்க மறுக்கிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை கிடைப்பதை காலங்கடத்துவதே அமலாக்கத்துறையின் திட்டமாக இருக்கிறது.அமலாக்கத்துறை தனி சட்டத்தை பின்பற்றுகிறதா என்பதை நீதிபதிகளே முடிவு செய்வார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியே தெரிகிறது. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதில் அமலாக்கத்துறை காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிப்பதில் ஆட்சேபனை இல்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications