“ஆதவ் அர்ஜுனா அமைச்சராகிட்டாரு.. கவனமா பார்த்துக்கணும்”.. விஜய்க்கு வார்னிங் கொடுத்த மார்ட்டின் மகன்
சென்னை: ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், அவரது மைத்துனரும் புதுச்சேரி எம்.எல்.ஏ.வுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், "ஆதவ் அர்ஜுனா காசு அடிக்காமல் விஜய் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்" எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்ற நிலையில் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் நேற்று மாலை வழங்கினார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டனர். இதேபோன்று புதுச்சேரியில் மார்ட்டின் மகனும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட்டார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, சுமார் 17000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொழிலதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்று, ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் ஒரே சமயத்தில் வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவுக்கும் அவரது மைத்துனரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும் இடையே பிணக்கு நிலவி வருகிறது. புதுச்சேரியில் எம்.எல்.ஏ ஆகியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து தாக்கிப் பேசி வருகிறார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், "ஆதவ் அர்ஜுனா எதுவும் காசு அடிக்க விடாம, அவரை எந்த ஒரு தப்பும் பண்ண விடாம கட்டுப்படுத்தி விஜய் பார்த்துக்கணும். இல்லையென்றால் ரொம்ப தப்பான விஷயங்களை செய்து கமிஷன் அடித்தால் நாட்டுக்கு இழப்பு" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications