பூவை ஜெகன் மூர்த்தியை சுத்து போட்டு கூட்டணியை பயமுறுத்த முயற்சியா? வரிந்துகட்டி வந்த எடப்பாடி!
சென்னை: திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு, ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் ஜெகன் மூர்த்தியை ஒரு ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக பூந்தமல்லி அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சனிக்கிழமை மாலை வந்தனர்.
இதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து போலீசார் அத்துமீறி ஜெகன் மூர்த்தியை கைது செய்ததாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அதிக அளவிலான போலீஸ் படை குவிக்கப்பட்டது.
போலீசார் வெளியேற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியினர் கோஷமிட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து ஜெகன் மூர்த்தியை விசாரிப்பதற்காக போலீசார் அவரது வீட்டிற்குள் வந்து சோதனை செய்தபோது அவர் வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு, ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஜெகன்மூர்த்தியை, ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக எப்பொழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற இந்த பொம்மை முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட பட்டாலியனை ஏன் அனுப்ப வேண்டும் ?
பட்டியலின மக்களின் குரலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒலிக்கும் ஜெகன்மூர்த்தி அவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் காழ்ப்புணர்வு நடவடிக்கை என்பது, நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் அதிமுக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக அரசு பயந்து வருவதையே காட்டுகிறது.
இப்படிப்பட்ட கைது முயற்சிகளால் அஇஅதிமுக கூட்டணி கட்சிகளை மிரட்டி, தங்கள் வழிக்கு கொண்டு வரலாம் என்று பகல்கனவு காணும் தீயசக்தி திமுக-வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!
ஆட்சி, அதிகாரம் என்பது மக்களுக்கு நன்மை செய்ய மட்டும் தான் இருக்கிறதே தவிர, எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயல்வதற்கு அல்ல என்பதை ஸ்டாலின் உணரவேண்டும். இந்த கொடுங்கோன்மைக்கு எல்லாம் உரிய பதிலை தமிழ்நாட்டு மக்கள் 2026-ல் திமுக-விற்கு நிச்சயமாக தருவார்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications