நோ கமெண்ட்ஸ்.. அண்ணாமலை, விஜய் குறித்து பேசவே கூடாது! அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி வாய்ப் பூட்டு!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு மூன்று முக்கிய உத்தரவுகளைப் போட்டிருக்கிறார். அதுதான் தற்போது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையை விமர்சிக்கக் கூடாது, விஜயைப் பற்றிப் பேசவே கூடாது என்பதுதான் மூன்றில் இரண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் என்கின்றனர் அதிமுகவினர்.
தமிழக அரசியலில் 2026 தேர்தல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. காரணம் இரண்டாவது முறையாக அதிமுக பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. 2019-லிருந்து ஒரே கூட்டணியை அமைத்து வெற்றி வாகை சூடியிருக்கும் திமுகவும் அதே கூட்டணியுடன் களம் காண்கிறது.
இதுவரை அடுத்தடுத்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றதில்லை என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி தக்க வைப்பாரா? அல்லது இதுவரை திமுக அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை மு.க.ஸ்டாலின் தகர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அசுர கூட்டணி பலத்துடன் இருக்கும் திமுக தேர்தலை மிக ஆர்வத்தோடும் உறுதியோடும் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. '10 தோல்வி பழனிசாமி' என்ற தன் மீதான விமர்சனங்களை உடைக்க எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நான்காம் கட்டமாக மதுரையில் சுற்றுப்பயணம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்கள் கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி ஹேப்பி என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
அதிமுக திட்டம்
அதே நேரத்தில் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது கட்சியின் தலைமையகமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் பல நிர்வாகிகளையும் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார். அப்படித்தான் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மூன்று முக்கிய விஷயங்களை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. திமுகவும் அதிமுகவும் பலமாக இருப்பதற்கு காரணம் பூத் கமிட்டிகள் தான்.
பூத் கமிட்டி
எனவே 2026 தேர்தலுக்கு முன்பாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டங்களை அதிகப்படுத்தி வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாவட்டத்தில் இருக்கும் சிறு சிறு அமைப்புகள், வணிகர் சங்கங்கள், சாதி அமைப்புகள் என அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்து திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
விஜய்
அடுத்த இரண்டு அறிவுறுத்தல்கள் தான் மிக முக்கியமானவை. புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் நம்மை பற்றி பேசினாலும், நான் பதில் அளித்து விட்டேன். இனிமேல் முன்னாள் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ, மாவட்ட செயலாளர்களோ விஜய் குறித்து எதுவும் பேசக்கூடாது. பொதுவெளியில், செய்தியாளர்கள் சந்திப்பிலும் விஜய் குறித்த கேள்வியை தவிர்த்து விடுங்கள். அவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க கூடாது என கூறினாராம்.
அண்ணாமலை
நேற்று வந்தவருக்கு பதில் சொல்ல வேண்டுமா? என்ற ரீதியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினாலும், 2026 தேர்தலில் இறுதி கட்டத்தில் கூட எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதற்காக விஜய் பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக சொல்கின்றனர் அதிமுகவினர். கடைசியான அறிவுறுத்தல் தான் மிக முக்கியம். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை எந்த காரணத்தைக் கொண்டும் யாரும் விமர்சித்து விடக்கூடாது என திட்டவட்டமாக உத்தரவு போட்டாராம் எடப்பாடி.
அதிமுக பாஜக கூட்டணி
கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக குறித்தும் அதிமுக தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை பேசியதால்தான் கூட்டணி முடிவுக்கு வந்தது. 2026-ல் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அதிமுக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்த நிலையில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கை. அதற்கும் பாஜக தலைமை ஒப்புக்கொண்டது. அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுக கூட்டணி அமைந்தது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பாஜக கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தனியாகவே இருந்தார்.
கூட்டணி அரசியல்
அவரிடம் சமாதானம் பேசிய பாஜக தலைமை தேர்தலுக்குப் பிறகு உரிய பொறுப்பு வழங்கப்படும், அதுவரை கட்சிப் பணியாற்றுங்கள் என அறிவுறுத்தியதாம். இதை அடுத்துதான் நெல்லையில் அமித்ஷா கலந்துகொண்ட மாநாட்டில் பேசிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என பேசினார். அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் எடப்பாடியுடன் அவர் ஒன்றாக கலந்துகொண்டதோடு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என பேசி வருகிறார். இதனால் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் இணக்கமான சூழல் நிலவும் நிலையில், அதிமுகவினர் எக்காரணத்தைக் கொண்டும் அவரை விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications