ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக.. மாஃபா பாண்டியராஜன்!
அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இருப்பதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே அதிமுக செயல்பட்டு வருவதாகவும், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் தொண்டர்களின் பலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணிகளின் தரப்பில் இரு வேட்பாளர்களை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நேற்று ஈரோடு வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு 7 மணி நேரமாக தொடர்ந்து மாரத்தான் ஆலோசனையை நடத்தினார். இதில் வேட்பாளர் தேர்வு, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவது, தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஃபா பாண்டியராஜன் பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணிகள் மட்டுமல்லாமல், கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வெற்றியை பெறுவதற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. அதனை இந்த இடைத்தேர்தல் உறுதிபடுத்தும்.

இரட்டை இலை சின்னம்
எத்தனை பேர் களத்தில் இருந்தாலும், நிச்சயம் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். தொண்டர்களின் பலமும் எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்று தெரிவித்தார். தொடர்ந்து, இரட்டை இலை இல்லையென்றாலும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு என்ன சிக்கலும் வராது என்று நினைக்கிறேன். தேர்தல் ஆணையம் எங்களுக்கே இரட்டை இலை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

களத்தில் இபிஎஸ்
அமமுக, ஓபிஎஸ் உள்ளிட்டோர் களத்தில் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் களத்தில் இருந்து பணியாற்றி வருகிறோம். அதிமுக நான்கு அணிகளாக பிரிந்துவிட்டது என்று பேசுவதில் எந்த உண்மையும் இல்லை. அந்த பேச்சுகளுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் சிறந்த பதிலாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பாஜக ஆதரவு
தொடர்ந்து, பாஜக நிலைப்பாட்டில் தாமதமாவது குறித்த கேள்விக்கு, பாஜகவை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம். அவர்கள் சில நாட்களில் ஆலோசனை மேற்கொண்டு சொல்வதாக கூறியுள்ளனர். பாஜகவின் வாக்கு வங்கி குறைவு என்றாலும், அவை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தாமதமானாலும், பாஜக ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். இன்னும் வேட்புமனு தாக்கல் தொடங்கவில்லை. அதனால் பாஜக நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதம் இல்லை என்று நினைப்பதாக என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications