சர்ச்சை சூறாவளி.. கருணாநிதிக்கே பதிலடி.. அதிரடிக்குப் பெயர் போன ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: இன்று காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிரடி பேச்சுகளுக்கும், சூடான கருத்துகளுக்கும் பெயர்போனவர். தமிழக அரசியல் களத்தில் தனது அனல் பறக்கும் காட்டமான விமர்சனங்களால் பல சர்ச்சைகளைக் கிளப்பியவர்.
தமிழக காங்கிரஸ் கட்சி எத்தனையோ தலைவர்களைக் கண்டிருக்கிறது. அவர்களில் அதிரடிக்கும் துணிச்சலுக்கும் பெயர் போன தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனங்களுக்கு எதிராக கதர் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குபவர். அப்படிப்பட்டவர், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக தனது பதவியையே ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தவர்.

தனது தடாலடி பேச்சுகளால் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார் இளங்கோவன். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரையே விமர்சிக்கவும் சற்றும் யோசிக்காதவர். நெற்றிப் பொட்டில் அடித்தது போல கருத்துகளைச் சொல்லக்கூடியவர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவை கொந்தளிக்க வைத்த இளங்கோவன்: கடந்த 2005 ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய பேச்சு திமுகவினரை கொந்தளிக்க வைத்தது. கருணாநிதியை ஜாதிரீதியாக திட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனையும் ஏக வசனத்தில் பேசியிருந்தார் இளங்கோவன். அது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
கருணாநிதிக்கு பதிலடி: கடந்த 2011ல் திமுக ஆட்சியை இழந்த பிறகு தனது பிறந்தநாளை அன்றைய திமுக தலைவர் கருணாநிதி விமரிசையாக கொண்டாடவில்லை. அண்ணா நினைவிடத்திற்குச் சென்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, உடன்பிறப்புகள், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன்மொழியை மறந்து விடாமல் பணியாற்ற வேண்டும்' என்று பதிலளித்தார். அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியைக் குறிப்பதாக விமர்சனம் எழுந்தது.
அப்போது, ஈவிகேஎஸ் இளங்கோவன், “திமுகவின் ஊழலால்தான் சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. கருணாநிதி முதலில் தனது மகளுக்கு அறிவுரை கூற வேண்டும். அவரது கூடா நட்பால்தான் இன்று சிறையில் இருக்கிறார்” என்று பேசினார். இது திமுக - அதிமுக இடையே பெரிய விரிசலை ஏற்படுத்தி, 2014 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறாததற்கும் ஒரு காரணமாக அமைந்தது.
இளையராஜா பற்றி இளங்கோவன்: மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்கரை பெருமைப்படுவார் எனக் கூறியிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்து குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசியது பெரும் சர்ச்சையானது. சாதிய மனநிலையில் இளையராஜாவை அவர் ஒருமையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்" என ஒருமையில் பேசி இருந்தார்.
சொந்த கட்சியையும் விட்டு வைக்காமல்: கடந்த ஆண்டு, கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது கோஷ்டி பூசல்கள் எழுந்தன. அப்போது, “தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.” என்று கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி: அண்மையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானபோது அதுகுறித்துப் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "பெண் அமைச்சராக இருக்கின்றவருக்கு அடக்கம், பணிவு வேண்டும். அவர் பணிவாக மன்னிப்பு கேட்கிறார். ஆனால், முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் கல்லைப் போல் அந்த அம்மையார் உட்கார்ந்து இருக்கிறார். மனிதர்களை மதிக்கக்கூடிய மனிதத்தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை" என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ராஜீவ் காந்திக்கு எதிராகவே: நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜியின் பரிந்துரையால் முதல் முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், வெற்றி பெற்றார்.
எம்ஜிஆரின் மரணத்தை தொடந்து ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சரானார். அப்போது அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில், காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது. அன்றைய பிரதமரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த அதிமுகவையே ஆதரிப்போம் என்று தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது ஜானகி ராமச்சந்திரன் அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களிக்கவேண்டும் என்று கோரினார் நடிகர் சிவாஜி. ஆனால் அதற்கு காங்கிரஸ் தலைமை சம்மதிக்காத நிலையில், சிவாஜி கணேசன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த சிவாஜி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications