யாருக்கு யார் துரோகி... துரைமுருகன் சீண்டல்... ஜெயக்குமார் பாய்ச்சல்... காரசாரமான வார்த்தைப் போர்..!
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்த விவகாரம் திமுக -அதிமுக இடையே காரசாரமான வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.
எம்.ஜி.ஆர். குறித்த துரைமுருகனின் விமர்சனத்திற்கு காலதாமதமாக எதிர்வினையாற்றிய அதிமுக தலைமை, நன்றியை மறந்த பாவத்திலிருந்து விடுபட வழியேயில்லை என குறிப்பிட்டிருந்தது.
இதனை கெட்டியாக பிடித்துக்கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் இதே வரியை கோடிட்டு காட்டி இது ஓ.பி.எஸ். -இ.பி.எஸ்.க்கும் பொருந்தும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்
வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், எம்.ஜி.ஆரை துரோகி என விமர்சித்திருந்தார். இது உலகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர். ரசிகர்களையும், விசுவாசிகளையும் கொதித்தெழ வைத்தது. அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, துரைமுருகன் கருத்துக்கு அதிமுக தலைமை ரியாக்ஷன் என்ன என கேள்வி எழுப்பியிருந்தார்.

திருக்குறள்
இதையடுத்து நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை காட்டமாக வெளியிட்ட அதிமுக தலைமை, எப்படிப்பட்ட பாவத்தை செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு, செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லை என்ற வள்ளுவரின் வாக்கினை சுட்டிக்காட்டியது. அதாவது தன்னை வளர்த்தெடுத்த, கல்விக்கட்டணத்தை செலுத்திய எம்.ஜி.ஆரையே துரைமுருகன் இப்படி கடுஞ்சொல்லால் விமர்சித்தது நன்றி மறந்த செயல் என ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். குறிப்பிட்டிருந்தார்கள்.

சீண்டல்
இதனிடையே எம்.ஜி.ஆரை விமர்சித்ததற்காக துரைமுருகன் மீது ஒரு பக்கம் கோபம் இருந்தாலும், மேற்கண்ட வரியை சுட்டிக்காட்டி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் இது பொருந்தும் என அமமுகவினர் தங்கள் பங்குக்கு கோல் அடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்று என துரைமுருகன் மீது பாய்ந்துள்ளார்.

துரோக கும்பல்
மேலும், கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியதே எம்.ஜி.ஆர். தான் என்றும் பேருந்து நிலையங்களில் விளம்பரப்படங்களை வைப்பது மட்டுமே திமுக அரசின் சாதனை எனவும் விமர்சித்துள்ளார். திமுக கட்சியே துரோக கும்பல் என விமர்சித்த அவர் எம்.ஜி.ஆர். மட்டும் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications