Palani Land: பழனியில் மட்டுமல்ல.. ஓபிஎஸ் ஊரிலும் கைவரிசை காட்டிய ஜஸ்டின் மணிகண்டன்! லிஸ்ட் பெருசா போகுதே!
சென்னை: பழனி கோயில் தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான நில மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே வேறு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஜஸ்டின் மணிகண்டன் சில ஆண்டுகளுக்கும் முன்பு பெரியகுளத்தில் சார்-பதிவாளராக இருந்த போது, சென்னையில் வசித்த தேனி தொழிலதிபருக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாகப் பதிந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஒட்டன்சத்திரத்திலும் இதே போல் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான மடத்தின் ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ததாக கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழனி சார்பதிவாளர்கள் கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாது என கூறிவிட்டு விடுப்பில் சென்ற நிலையில் கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் வரவழைக்கப்பட்டு பத்திரப்பதிவு செய்ய வைத்தது தெரியவந்தது.
பழனி நில மோசடி
இந்த பத்திரப் பதிவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துவிட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது ஏற்கெனவே வேறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அது என்ன வழக்கு என்பதை பார்க்கலாம். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் விஜய் பாலா. இவர் சென்னையில் ஆட்டோமொபைல் தொழில் செய்து வருகிறார்.
தேனி நில மோசடி
இவர்களுக்குச் சொந்தமான 1.08 ஏக்கர் நிலம், இவரது அத்தை சுப்புலட்சுமியின் 99 சென்ட் நிலம் மற்றும் 7 பிளாட்கள் மேல்மங்கலத்தில் இருந்தன. நிலத்தை மேல்மங்கத்தை சேர்ந்த கட்டத்தேவன் என்பவர் பராமரித்தார். விஜய்பாலா சொத்துக்களை விற்பனை செய்ய வில்லங்கச் சான்றிதழை பார்த்த போது கட்டதேவன், விஜய் பாலாவின் உறவினர் ரவிசங்கர் ஆகியோர் சேர்ந்து விஜய் பாலா, சுப்புலட்சுமி என்ற பெயரில் வேறு நபர்களை கொண்டு ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்து நிலங்களை விற்றது தெரியவந்தது.
ஜஸ்டின் மணிகண்டன்
இந்த சம்பவம் குறித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி எஸ்பியிடம் விஜய் பாலா புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து கட்டதேவன், குருசாமி, ரவிசங்கர், ஈஸ்வரன், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ அமாவாசி, பாண்டியராஜன், பெரியகுளம் சார் பதிவாளர்கள் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், பத்திர எழுத்தாளர்கள் அசோகன், அறிவழகன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
பழனி கோயில்
இதில் கட்டதேவன், குருசாமி, ஈஸ்வரன், ரவிசங்கர் ஆகியோரை கடந்தாண்டு போலீஸார் கைது செய்தனர். பத்திர எழுத்தர்கள் அசோகன், அறிவழகன் ஆகியோரை கைது செய்தனர். இப்படி இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பழனி கோயில் நில வழக்கிலும் ஜஸ்டினுக்கு தொடர்புடையது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிசிஐடி
ஏற்கனவே பழனி கோவில் முறைகேட்டில் சிக்கி இருக்கும் ஜஸ்டின் மணிகண்டன் இதற்கு முன்பு ஒட்டன்சத்திரத்தில் சார் பதிவாளராக பணியாற்றியபோது விவசாயி ஒருவரின் நிலத்தை முறைகேடாக பதிவு செய்ததாக சஸ்பெண்ட் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி, ஒட்டன்சத்திரம் மட்டுமல்லாமல் தற்போது தேனியிலும் அவர் கைவரிசை காட்டி இருப்பது வெளியே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கிடையே வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஜஸ்டின் மணிகண்டன் இதுபோல முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா? என்றும் தனியே சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
