தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிப்பு.. கமல், இளையராஜா பெயருக்கு தனி மரியாதை!
சென்னை: இந்த வருஷம் தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருது பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் பாலிவுட், தென்னிந்திய சினிமா, வெப் தொடர்கள், சர்வதேச படங்கள் என பல பிரிவுகளில் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களுக்கு இந்த பட்டியலில் 2 பெயர்களை பார்க்கும்போது தனி சந்தோஷம் இருக்கும். அது கமல்ஹாசன், இளையராஜா தான்.
ஒரு பக்கம் இன்றைய தலைமுறை நடிகர்களான ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி என பலருடைய படைப்புகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் கமல்ஹாசனுக்கு தமிழ் சினிமாவில், திரைத்துறையில் சிறந்த பங்களிப்புக்கான அங்கீகாரமும் இளையராஜாவுக்கு இசைத்துறையில் சிறந்த பங்களிப்புகான அங்கீகாரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு விருது
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு படத்தில் எந்த மாதிரி கதையை தேர்வு செய்வது? கதாபாத்திரத்துக்காக தன்னையே எப்படி மாற்றிக் கொள்வது? தொழில்நுட்பத்தில் புதுமைகளையும் முயற்சி செய்வது என தமிழ் சினிமாவில் பல விஷயங்களில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சி செய்து கொண்டிருப்பவர். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் பயணித்தாலும் இப்போது அவருடைய படங்கள் அடுத்தடுத்து முயற்சிகள் குறித்து ரசிகர்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.அவருக்கு திரை துறையில் சிறந்த பங்களிப்பு காண விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கவனம் பெற்றுள்ளது.
இளையராஜாக்கு விருது
அதேபோல இளையராஜா ஒரு தலைமுறையை தனது இசையால் கட்டிப் போட்டவர். காதல் பாடல்களாக இருந்தாலும், கிராமத்து இசையாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் சரி அவருடைய பாட்டை கேட்டாலே மனதிற்கு நிம்மதி என்று சொல்ல வைத்து விடுபவர். இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் கூட அவருடைய இசையை பற்றி பேசுவது, அவருடைய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்பதும் தொடர்கிறது. இசைத்துறையில் சிறந்த பங்களிப்புக்க விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு விருது பட்டியலில் துரந்தர் படத்துக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர் என பல விருதுகளை அந்த படம் பெற்றிருக்கிறது. ரன்வீர் சிங்குக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் காந்தாரா சாப்டர் 1 படத்திற்கும் விமர்சகர்கள் தேர்வில் சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரிஷப் ஷெட்டிக்கு விருது
ரிஷப் ஷெட்டியின் நடிப்பு, இயக்கத்தால் ரசிகர்களிடம் பேசப்பட்ட விஷயங்களுக்கு இந்த விருதுகள் கூடுதல் கவனம் பெறுகிறது. சயாரா படத்துக்கும் பாடல், இசை, பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் விருது பட்டியலிலும் அதற்கான இடம் கிடைத்திருக்கிறது. சினிமா மட்டுமல்லாமல் வெப் தொடர்களுக்கும் இந்த விழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
அதுபோல தொலைக்காட்சி சீரியல்களில், தாராக் மேத்தா கா இல்லா பால்மா சிறந்த சீரியலாகவும், கியுங்கி சாஸ் பி கபி பாஹு தி 2 சீரியலில் நடித்த அமர் உபாத்யாயா மற்றும் ஸ்மிருதி ராணி ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த பட்டியலில் புதிய தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் இளையராஜா என 2 பெயர்களும் மீண்டும் ஒரு சர்வதேச விருது மேடையில் அங்கீகரிக்கப்பட்டது தனி பெருமையாக இருக்கும். காலம் மாறலாம், படங்களின் ஸ்டைல் மாறலாம். ரசிகர்களின் ரசனை மாறலாம். ஆனால சில கலைஞர்களின் திறமை மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாததாகவே இருக்கிறது.




Click it and Unblock the Notifications
