தேவா நினைவேந்தலில் தமிழக அரசிடம் 3 கோரிக்கை வைத்த ஸ்ரீகாந்த் தேவா.. இது நிறைவேறுமா?
சென்னை: தேனிசைத் தென்றல் தேவா கடந்த மாதம் காலமான நிலையில், அவர் இல்லாமல் போய்விட்டார் என்பதை இன்னமும் பலரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் இசையமைத்த பாடல்களை கேட்கும்போது அவரைப்பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தேவாவின் பிறந்தநாள் நேற்று நவம்பர் 20ஆம் தேதி வந்த நிலையில், சென்னையில் அவருக்காக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.
தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவருடைய திரு உருவப் படத்தை இசைஞானி இளையராஜா திறந்து வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருக்கிறார். அதுபோல தேவாவின் இசை பயணத்தை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினர், இசை கலைஞர்கள் மற்றும் இசை துறையினர் கலந்து கொண்டு கொண்டனர். அவரைப் பற்றிய பல நினைவுகளையும் பேசி இருந்தார்கள். அப்போது தேவாவின் மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு 3 முக்கிய கோரிக்கைகளை வைத்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா கோரிக்கை
மறைந்த தனது தந்தையின் இசை பங்களிப்பையும், தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூறும் வகையில் தேவாவுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தேவா கோரிக்கை வைத்திருக்கிறார். அதுபோல தமிழ் சினிமாவில் கானா இசையை ஒரு பெரிய ரசிகர் வட்டத்துக்குள் கொண்டு சென்றவர் தேவா. குறிப்பாக, சென்னையில் மண்வாசனையோடு, மக்களின் வாழ்க்கையோடு கலந்த பாடல்களை சினிமாவில் கொடுத்தவர்.
கானா நாள்
அவருடைய பெயரும், இசையும் அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் பிறந்த நாளான நவம்பர் 20ஆம் தேதியை "கானா நாளாக" கொண்டாட வேண்டும் என்றும் கேட்டு கொண்டு இருக்கிறார். மேலும் சென்னையில் உள்ள பத்மநாபன் தெருவுக்கு தேவாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசிடம் ஸ்ரீகாந்த் தேவா கேட்டிருக்கிறார். தேவா பிறந்து வளர்ந்த சென்னையே அவருடைய மிகப்பெரிய அடையாளமாக இருந்தது.
தெருவிற்கு தேவாவின் பெயர்
சென்னையின் கானா கலாச்சாரத்தையும், சாதாரண மக்களின் மொழியையும் இசையில் கொண்டு வந்து ரசிகர்களிடம் சேர்த்தார் என்பதால் அவருடைய பெயரில் இந்த தெரு இருப்பது அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்பதே இந்த கோரிக்கையின் பின்னணியாக இருக்கிறது. ஆனால் இதுவெல்லாம் நிறைவேற்றப்படுமா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கு முன்பு சில பிரபலங்களின் பெயரை அவர்கள் வாழ்ந்த தெருவிற்க்கோ அல்லது மற்ற இடங்களுக்கு வைத்திருக்கிறார்கள்.
இளையராஜா செயல்
அதேபோல இப்போ தேவாவின் பெயரையும் தெருவிற்கு வைக்கப்படுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதுபோல இந்த நிகழ்வில் இளையராஜா கலந்து கொண்டதும் அதிக கவனத்தை பெற்று வருகிறது. இளையராஜா தேவாவின் இறுதி சடங்கில் நேரில் கலந்து கொள்ளவில்லை. அதுபோல தேவா இழப்பிற்கு வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு கூட வெளியிடவில்லை என்ற விமர்சனம் இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி இப்போ இளையராஜாவே தேவாவின் திரு உருவப்படத்தை திறந்து வைத்திருக்கிறார்.




Click it and Unblock the Notifications
