தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Gratuity ரூ 25 லட்சமாக உயர்வு! Bad News-ம் இருக்கு!
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணிக்கொடைக்கான (Gratuity) உச்சவரம்பு ரூ 20 லட்சத்தில் இருந்து ரூ 25 லட்சமாக உயர்த்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் நிதித் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 281-இன்படி அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகையை தங்களுக்கும் வழங்க வேண்டும் என மின்பகிர்மானக் கழகம் கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று நிதித் துறையின் ஒப்புதலுடன் தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான உத்தரவை எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் அனில் மேஷ்ராம் வெளியிட்டுள்ளார். இந்த பணிக்கொடை உயர்வான கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி அந்தத் தேதிக்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
இருந்தாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பணிக்கொடைக்கான உச்சவரம்ப ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்தது. வருமான வரிச் சட்டத்தின்படி ரூ 20 லட்சம் வரை உள்ள பணிக்கொடைக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு.
அதற்கு மேல் கிடைக்கும் ரூ 5 லட்சம் சம்பளம் வருமானமாக கருதப்பட்டு அதற்கு வரி பிடித்தம் செய்யப்படும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. வரிபிடித்தம் செய்வது குறித்து நடைமுறைகள் தனியாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
