வடிவேலு இடத்தை அரசியலில் நிறைவேற்றும் வைகோ! மதிமுக கரைந்து விட்டது.. விளாசிய மல்லை சத்யா
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு இல்லாத இடத்தை அரசியலில் வைகோ நிறைவேற்றி வருகிறார் என மல்லை சத்யா விமர்சித்துள்ளார். மேலும் மதிமுக என்ற கட்சிக்கான தேவையும் தமிழ்நாட்டுக்கு இல்லை என பேசிய மல்லை சத்யா, அந்த கட்சி இப்போது கரைந்து காணாமல் போய் வருகிறது எனவும், நிர்வாகிகள் மட்டும் தான் இருக்கிறார்கள். தந்தை ஆரம்பித்த கட்சியை மகன் விரைவில் முடித்து வைப்பார் என்று கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, வைகோ குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மல்லை சத்யா கூறியதாவது:-

டெப்பாசிட் கூட வாங்கவில்லை
தெருத் தெருவாக சுத்துவேன் என்று வேற சொல்லியிருக்கிறார். அவர் தெருத்தெருவாக சுத்த வேண்டிய நிலை வரும். அவர் ஏற்கனவே 96-இல் இப்படி தான் தெருத் தெருவாக சுற்றினார். அவர் வலிமையோடும் பொலிவோடும் இருந்த காலக்கட்டம். போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. டெப்பாசிட் இழந்தது என்பதை மறந்துவிட கூடாது.
2001 ஆம் ஆண்டும் இதே போன்று தான் தெருத்தெருவாக வந்தார். ஆனால் மக்கள் புறக்கணித்தார்கள். 2014 ஆம் ஆண்டில் மக்கள் நல கூட்டணி என்று ஒன்றை ஆரம்பித்தார். விஜயகாந்த் அவர்களை முன்னிலைப்படுத்தி, 6 கட்சிகள் ஒன்றிணைந்து வாக்கு சேகரிக்க சென்றனர். இதில் போட்டியிட்ட திருமாவளவனை தவிர மற்ற 233 தொகுதிகளில் டெப்பாசிட்ட இழந்தார்கள் என்பது தான் அவர்களுடைய வரலாறு. இது தான் அவருடைய நிலைமை.
மதிமுக தமிழ்நாட்டுக்கு தேவையில்லை
எனவே அவர் சொல்வது இப்போது பொறுத்தவரையிலும், இப்போது நகைச்சுவை நடிகர் வடிவேலு இல்லாத இடத்தை அரசியலில் வைகோ நிறைவேற்றி வருகிறார் என்பது தான் சமூக ஊடகங்களில் வரும் செய்தியாக இருக்கிறது. நாட்டு மக்கள் யாரும் அவரை பெரிதாக பொருட்படுத்தவில்லை. மதிமுக என்ற கட்சிக்கான தேவையும் தமிழ்நாட்டுக்கு இல்லை.
இங்கு நின்று கொண்டு இருக்கும் நாங்கள் எல்லாரும் மதிமுகவில் பணியாற்றியவர்கள். தீவிரமாக பணியாற்றியவர்கள். அங்கு இருந்து நாங்க அனைவரும் வெளியேறிவிட்டோம் ஒரு சிலரை தவிர. நிர்வாகிகள் மட்டும் தான் அங்கு இருக்கிறார்கள். அந்த கட்சி இப்போது கரைந்து காணாமல் போய் வருகிறது. தந்தை ஆரம்பித்த கட்சியை மகன் விரைவில் முடித்து வைப்பார். என்று பேசினார்.



Click it and Unblock the Notifications
