தமிழக உள்ளாட்சி தேர்தலில் வெயிட்டாக எதிர்பார்க்கும் மதிமுக! வைகோ கேட்டால் விஜய் ஓகே சொல்வாரா?
திருவாரூர்: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பங்களிப்புடன் அதிக இடங்களை பெற்று வெற்றி பெற வேண்டும் என மூன்று மாவட்டங்களுக்கான மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம் கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆடுதுறை முருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வரும் 28-ஆம் தேதி தஞ்சாவூரில் வைகோ தலைமையில் நடைபெறும் மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் வந்தியத்தேவன் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவ வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூரில் வைகோ தலைமையில் நடைபெறும் மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வது எனவும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் பங்களிப்புடன் அதிக இடங்களை பெறுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை கழக செயலாளர் வந்தியத்தேவன் வரும் 28ஆம் தேதி வைகோ தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே போன்று திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து ஆயிரத்திற்கும் குறையாமல் மதிமுக தொண்டர்கள் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
திமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு பிரிந்து வந்த வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) என்ற கட்சியை 1994 ஆம் ஆண்டு தொடங்கினார். 1996ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட மதிமுக, ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
2001 ஆம் ஆண்டு மதிமுக தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 6 இடங்களில் மட்டுமே வென்றது.
2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்படாததால் அந்த சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி என உருவாக்கி தேமுதிக, மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், தமாகா ஆகிய கட்சிகளுடன் மதிமுக மட்டும் 29 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒன்றில் கூட வெல்லவில்லை.
பின்னர் 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு வயோதிகம் காரணமாக தனது 94 ஆவது வயதில் இறந்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை, மருத்துவமனைக்கு சென்று வைகோ பார்வையிட்டார்.
பின்னர் அவரது இறப்பில் பங்கேற்ற அவர், கருணாநிதியின் ஆசையான ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என சபதம் எடுத்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக, 4 இடங்களில் வென்றது.
இதையடுத்து 2026 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. எனினும் இந்த தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது. இதையடுத்து தவெக 108 இடங்களில் மட்டுமே வென்றதால் பெரும்பான்மைக்காக காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மதிமுகவும் இரண்டு இடங்களில் வென்றிருந்தாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் இடம்பெற்ற நிலையில், மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
