64 வில்லாக்களை வாங்கிய ஐஏஎஸ், IPS தம்பதி.. ரூ.59 லட்சம் சொத்தை 11 லட்சத்துக்கு பெற்ற ஷிகர் அகர்வால்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், அவரது மனைவி ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் தொடர்பான சொத்து விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு வில்லாவின் விலை ரூ.59 லட்சம் என்று ரிசார்ட் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதே அளவுள்ள வில்லாக்கள் வெறும் ரூ.11 லட்சத்துக்கு வாங்கப்பட்டிருப்பது இப்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானில் ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால், அவரது மனைவி ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் ஆகியோரது குடும்பத்தினர், அனந்தா ரிசார்ட்ஸ் நடத்தும் கோயல் பேஷன் நிறுவனத்திடமிருந்து 40 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால்
சந்தை விலையைவிட குறைவாக வாங்கிய இந்த சொத்துக்களை மீண்டும் அதே நிறுவனத்திற்கே வாடகைக்கு விட்டுள்ளனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், இந்த 40 சொத்துக்களும் ஷிகர் அகர்வால், அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் பிரஷாகா மாத்தூரின் பெற்றோர் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், ஷிகர் அகர்வால் தாக்கல் செய்த சொத்து கணக்கிலும், அவரது மனைவி தாக்கல் செய்த சொத்து கணக்கிலும் இந்த விவரங்கள் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதுடன், ஊழல் தடுப்புப் பிரிவும் விசாரணையைத் தொடங்கியது.
24 வில்லாக்கள் வாங்கிய மகன்கள்
இந்த நிலையில், ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) பதிவு செய்துள்ள வழக்கில் மேலும் பல ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஷிகர் அகர்வாலின் மகன்கள் கடந்த அக்டோபர் 15-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அனந்தா ரிசார்ட்டில் 24 வில்லாக்களை வாங்கியிருக்கிறார்களாம்.. இதற்காக மொத்தம் ரூ.2.64 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வில்லாவின் விலை ரூ.11 லட்சம்.
ஆனால், அதே அளவுள்ள வில்லாக்களின் விலை ரிசார்ட் நிறுவனம் வெளியிட்ட விளம்பர பிரசுரத்தில் ரூ.59 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது, ரூ.59 லட்சம் மதிப்புள்ள வில்லாக்கள் எப்படி ரூ.11 லட்சத்துக்கு விற்கப்பட்டன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விலை வித்தியாசம் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
2.5 ஆண்டுகளில் 64 சொத்துக்கள்
இந்த 24 வில்லாக்களையும் சேர்த்தால், இந்த இரண்டரை வருடங்களில் மட்டும், ஷிகர் அகர்வால் குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துக்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளதாம்..
முதலில், 2023 அக்டோபரில் உதய்ப்பூரில் உள்ள புஜ்தா பகுதியில் 20 காட்டேஜ்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு காட்டேஜ் ரூ.15 லட்சம் என்ற விலையில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 2026 மார்ச் மாதம் அல்வாரில் உள்ள அனந்தா அஜாப்கர் ரிசார்ட்டில் 20 வில்லாக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 14 வில்லாக்கள் தலா ரூ.16.5 லட்சத்துக்கும், 4 வில்லாக்கள் தலா ரூ.15 லட்சத்துக்கும், மீதமுள்ள 2 வில்லாக்கள் தலா ரூ.14 லட்சத்துக்கும் வாங்கப்பட்டுள்ளன.
இப்போது ஜெய்ப்பூரில் மேலும் 24 வில்லாக்கள் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இப்படி 3 கட்டங்களாக மொத்தம் 64 சொத்துக்கள் குடும்பத்தினர் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய அன்றே வாடகை ஒப்பந்தம்
இந்த சொத்துக்களை வாங்கியதோடு மட்டும் நிற்கவில்லை. வாங்கிய அன்றே மீண்டும் கோயல் பேஷன் நிறுவனத்திற்கே அவற்றை நீண்டகால வாடகை ஒப்பந்தம் மூலம் கொடுத்துள்ளனர்.
இதனால், சொத்துக்களை வாங்கிய குடும்பத்தினர் அவற்றை நேரடியாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ரிசார்ட் நிறுவனமே தொடர்ந்து அவற்றை சுற்றுலா பயன்பாட்டுக்கு நடத்தி வரலாம். அதில் கிடைக்கும் வருவாயில், சொத்துக்களின் உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அரசு விதிகளில் திடீர் மாற்றம்
இந்த சொத்து விவகாரத்துடன், ஷிகர் அகர்வால் அரசு பொறுப்பில் இருந்தபோது எடுத்த முடிவுகளும் இப்போது விசாரணைக்கு வந்துள்ளன.. குறிப்பாக, ராஜஸ்தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக அவர் இருந்தபோது, 2023 ஆகஸ்ட் 28-ம் தேதி சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரிசார்ட்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலம் மாற்றம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வனத்துறையின் தடையில்லா சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டதாக ACB வழக்கில் கூறப்பட்டுள்ளது. இதனால் சரிஸ்கா புலிகள் காப்பகம் அருகே உள்ள ரிசார்ட்கள் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டதா என்றும் விசாரிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, 2023 டிசம்பர் 12-ம் தேதி அஜாப்கர் ரிசார்ட்டுக்கும், 2024 ஜூன் 7-ம் தேதி ஜெய்சால்மரில் உள்ள தமோதரா ரிசார்ட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்ட விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்களாம்.
இந்த முடிவுகளால் தனியார் நிறுவனத்துக்கு அரசு தரப்பில் தேவையற்ற சலுகைகள் கிடைத்ததா, அதற்கு பதிலாக ஷிகர் அகர்வால் குடும்பத்தினர் குறைந்த விலைக்கு சொத்துக்களை வாங்கினார்களா என்பதுதான் விசாரணையின் முக்கிய ஹைலைட்டாக உள்ளது. அஜாப்கர் சொத்து விற்பனையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைகோர்ட்டில் நிவாரணம் மறுப்பு
இதனிடையே, இந்த ACB விசாரணையை எதிர்த்து ஷிகர் அகர்வால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நவம்பர் 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதிபதி அனில் குமார் உப்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தன் மீது தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக ஷிகர் அகர்வால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விசாரணையை நிறுத்தி வைக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒருவேளை கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இருந்தால், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் கொடுத்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரு பக்கம் குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட 64 சொத்துக்கள், இன்னொரு பக்கம் அந்த சொத்துக்களை விற்ற நிறுவனத்துக்கே மீண்டும் வாடகைக்கு விட்ட ஒப்பந்தம், இதனிடையே அரசு விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் என இந்த விவகாரத்தில் பல கேள்விகள் எழுந்து, பரபரப்பை கிளப்பி விட்டுள்ளன...!!




Click it and Unblock the Notifications
