முதல்வர் விழாவில் கலந்து கொள்வதை விட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு என்ன கிழிக்கிற வேலை.. தவெக எம்எம்ஏ காட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர், விழாக்களில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்துகொள்வதைவிட என்ன கிழிக்கிற வேலை அவர்களுக்கு இருக்கிறது என்று தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்சரவணன் குமார் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலும் எம்.எல்.ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், மக்களுடைய உரிமைகளையும், மக்களுடைய குரலையும் எதிரொலிக்கிறதுக்கு ஆள் இல்லாம குறைஞ்சுகிட்டே வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக சொல்லணும்னா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் என்பது புதுச்சேரியில் குறைஞ்சு போச்சு..
புதுச்சேரியில் சட்டசபை செத்துப் போச்சுன்னே சொல்லலாம் . மேலும் இன்னைக்கு ஒரு இந்தியாவின் இரும்பு மங்கைன்னு சொல்லக்கூடிய இந்திரா காந்தியின் பிறந்த நாளில், அத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பெரும்பான்மையான அதிகார மையமும் இருக்க வேண்டும். ஆனால் இன்னைக்கு வராதது ரொம்ப வெட்கக்கேடானது. புதுச்சேரியில் 27-க்கு மேற்பட்ட ஐ.ஏ.எஸ், 10-க்கு மேற்பட்ட ஐ.பி.எஸ் இருந்தும், ஒருத்தர் கூட இந்த விழாவுக்கு வராதது கேவலப்படுத்துற செயல், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற தலைவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் மரியாதை செலுத்த வரும் போது அத்தனை பேரும் இங்க இருக்கணும். ஆனால் இங்கு இல்லாதது வருங்கால ஜனநாயகத்தையே ஒரு கேள்விக்குறியாக்கும்.
அதனால, வருங்காலத்துல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அனைவரும் முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால், எல்லாரும் பிரசென்ட்ல இருக்கணும். இதை விட உங்களுக்கு என்ன கிழிக்கிற வேலை இருக்கு. மரியாதையா எல்லாரும் அரசாங்க நிகழ்ச்சி, முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அனைவரும் இருக்க வேண்டும்" இவ்வாறு சாய்சரவணன் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்தாலும் புதுச்சேரியில் தவெக வெற்றி பெறவில்லை.. எனினும் புதுச்சேரியில் தவெக 16.72% வாக்குகளை பெற்று அசத்தியது. அங்கு இரண்டு பேர் தவெக எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் சாய்சரவணண் குமார். திருபுவனை (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார். இன்னொருவர் பி. ராமு.இவர் மனவெளி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.



Click it and Unblock the Notifications
