“திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாவிட்டால் தவெக அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்க கூடாது” - எச்.ராஜா
சிவகங்கை: "திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றியாக வேண்டும். மலை மீது தீபம் ஏற்றமாட்டோம் எனச் சொன்னால் இந்த அரசை ஒரு நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது." என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தவெக ஆட்சி மோசமான கிறிஸ்தவ மதவெறி ஆட்சியாக, இந்து விரோத ஆட்சியாகத்தான் உள்ளது.

விஜய் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து வைத்திருந்தார். அவரது பெயர் ஜோசப் விஜய் என முதலில் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது நான் தான். அவர் கிறிஸ்தவ மத வெறியர். தவெகவிற்கு இந்துக்கள் ஏமாந்து போய் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். விரைவில் மாற்றி வாக்கு செலுத்துவார்கள்.
திருப்பரங்குன்றம் மலையின் மீது தீபம் ஏற்றியாக வேண்டும். ஏற்ற மாட்டேன் என்று சொல்கிற ஒவ்வொருத்தரும் பாரதத்தாயின் குழந்தையாக இருக்க முடியது. 1931 லண்டன் பிரீவ் கமிஷன் தீர்ப்பு தெளிவாக உள்ளது. மலை மீது தீபம் ஏற்றமாட்டோம் எனச் சொன்னால் இந்த அரசை ஒரு நிமிடம் கூட வைத்திருக்கக் கூடாது.
திமுக என்றாலே ஊழல் பேர்வழிகள் என்றுதான் அர்த்தம். அவர்கள் கைது செய்யப்பட்டதை நான் வரவேற்கிறேன். இவர்கள் வெளியிலே வர முடியாத அளவிற்கு சிறையில் வைத்திருக்க வேண்டும்." என்றார்.
பாஜகவின் செயல்பாடு தமிழகத்தில் தற்போது குறைந்துள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "என்னுடைய செயல்பாடு குறைந்துள்ளது என கேட்கிறீர்களா? என சிரித்துக்கொண்டே பதில் கேள்வி எழுப்பினார் எச்.ராஜா.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருந்தார். இதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருந்தது. இதற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் நவம்பர் 24ல் ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
