பசியில் 300 மாணவர்கள்.. மதிய உணவுக்கு அரிசியில்லை.. அரசால் முடியாததை செய்து காட்டிய மக்கள்!
பெங்களூர்: அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்திற்கு தேவையான அரிசியை அதிகாரிகள் வழங்கவில்லை. இதனால் 300 மாணவர்கள் பசியில் துடிக்கும் நிலை வந்த நிலையில் அந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் மதிய உணவுக்கு அரிசி வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ தை்துள்ளது.
இந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகாவில் சல்லால் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 300 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது.

அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு மதிய உணவுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சல்லால் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவுத் திட்டத்திற்கு தேவையான அரிசியை அரசு அதிகாரிகள் வழங்கவில்லை.
இதனால் அந்த திட்டம் 15 நாட்களுக்குள் நிறுத்தப்படும் நிலை வந்தது. பள்ளியில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. அரிசி இல்லாததால், மதிய உணவுத் திட்டத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் பள்ளிக்கான அரிசி கிடைக்கவில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டினர்.
இதுபற்றி அறிந்த கிராம மக்கள் மனம் நொந்து போனார். எப்படியாவது மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை பள்ளி நிறுத்தக்கூடாது. அதற்கான உதவியை வழங்க முடிவெடுத்தனர். அதன்படி கிராம மக்கள் இணைந்து நன்கொடை வசூல் செய்து நான்கு குவிண்டால் அரிசியை வாங்கி பள்ளிக்கு வழங்கினர். இதன்மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து மதிய உணவு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.
'காமராஜர்' என்றதும் நமக்கு முதலில் நியாபகம் வருவது காங்கிரஸ் கட்சியும், அவரது மதிய உணவு திட்டமும் தான். தமிழக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து வெற்றிக்கரமாக செயல்படுத்திய காமராஜர் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் கர்நாடகாவில் தான் தற்போது இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். தற்போது அம்மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில்உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன. இப்படியான சூழலில் அரசு பள்ளியின் மதிய உணவு திட்டத்திற்குத் தேவையான அரிசி வழங்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதோடு, சமூக ஆர்வலர்கள் அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
