விவசாயிகளை காப்பாற்ற சோத்துப்பாறை அணையை தவெகவினர் திறந்திருப்பாங்க! தப்பில்லையே! வைகோ சப்பைக்கட்டு
கோயமுத்தூர்: தேனி மாவட்டத்தில் பேச்சிப்பாறையை மதகுகளை திறக்க அதிகாரிகள் யாரும் வந்திருக்கமாட்டார்கள், அதனால் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தவெகவினர் தன்னிச்சையாக திறந்ததில் தவறு இல்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சோத்துப்பாறை அணையை தவெகவினர் திறந்தது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் அளித்திருந்த நிலையில் வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, முதல்வர் விஜய்யுடனான நடைபயணத்தின் போது போக்குவரத்துத் துறை அமைச்சரைத் தள்ளிவிட்டதாகப் பரவும் வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஆவேசமாகப் பதிலளித்த வைகோ, "முதல்வர் விஜய் என்னைத் தன்னுடன் நடந்து வருமாறு அழைத்ததால் அவருடன் சென்றேன். அப்போது கூட்ட நெரிசலில் யாரோ ஒருவர் தேவையில்லாமல் குறுக்கே புகுந்து என் கையைப் பிடித்து இழுத்தார். அவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அமைச்சரா என்றும் தெரியாது. அதனால் 'உன் வேலையைப் பார்த்துப் போ' என்று கூறினேன். யாரையும் தள்ளிவிடவில்லை.
பாதுகாப்பு பணி
முதல்வருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் பணியைத்தான் நான் செய்தேன். இதற்கு முன்பும் வாஜ்பாய், வி.பி.சிங், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கும் இவ்வாறு பாதுகாப்பாக இருந்துள்ளேன்.
12 கிலோமீட்டர் தூரம் முதல்வரின் கையைப் பிடித்துக் கொண்டு நான் நடந்ததைச் சகிக்க முடியாமல், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுத் திரித்துச் செய்தி வெளியிடுகின்றன" என்றார்.
திமுக ஏஜென்ட்
தொடர்ந்து செய்தியாளர்களுடன் ஏற்பட்ட விவாதத்தின் போது, "என்னைப் போல் பத்திரிகையாளர்களை மதிப்பவர்கள் யாரும் இல்லை. ஆனால், திமுகவின் ஏஜென்ட்டுகளைப் போல் செயல்பட்டு, என்னைக் கோபப்படுத்த வேண்டும், புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டுக் கேள்விகளைக் கேட்கிறீர்கள். 62 ஆண்டுகால அரசியலில் நான் பார்க்காத விமர்சனங்களா? எந்தச் செய்தியை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள், நான் கவலைப்படப் போவதில்லை" என வைகோ காட்டமாகத் தெரிவித்தார்.
தன்னை சிலர் 'திமுகவின் வடிவேலு' என விமர்சிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,"வடிவேலு ஒரு தமிழன்; தமிழருக்காகப் பாடுபடுபவர். சினிமாவின் உச்சத்தில் இருந்த அவரை, திமுகவுக்குப் பிரச்சாரம் செய்ய அழைத்துப் பயன்படுத்திக் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு தங்கள் தயாரிப்பு நிறுவனப் படங்களில் கூட வாய்ப்பு கொடுக்காமல் கழுத்தறுத்து 'பீல்டு அவுட்' ஆக்கியது திமுகதான். அப்படிப்பட்டவர்கள் என்னை வடிவேலுவுடன் ஒப்பிடுவது பொருத்தமானதுதான்" என்று சாடினார்.
திமுகவில் இருந்து வெளியேறியது ஏன்?
மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை விளக்கிய வைகோ, "கட்சியே இல்லாதவர்களுக்கு அதிக இடங்களைக் கொடுத்து, எங்களை அவமானப்படுத்தியதால்தான் பொதுக்குழு முடிவின்படி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம். முன்பு குஜராத் கலவர விவகாரத்தில் கொள்கைக்காகப் பிரதமர் மோடி கூட்டணியையும் உதறித் தள்ளியவர்கள் நாங்கள்" என்றார்.
முன்னாள் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் திருமணச் செலவுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்த வைகோ, "அதிமுக ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தை விமர்சித்து 5 ஆண்டுகள் அரசியல் செய்த திமுகவினர், தற்போது சென்னை, மும்பை, டெல்லியை விட்டுவிட்டு கிரேக்க நாடான கிரீஸில் (Greece) சென்று திருமணம் நடத்துகின்றனர்.
கிரீஸ் கல்யாணம்
முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் குடும்பத்தினர் பிசினஸ் கிளாஸ் விமானங்களில் சென்று, நட்சத்திர ஓட்டல்களில் தங்கிப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்துவதை எந்த ஊடகமும் கேள்வி கேட்பதில்லையே ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய அவர், "1991-ம் ஆண்டு முதல் ஸ்டாலின் ஆட்சி முடியும் வரை நடந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், லாக்கப் மரணங்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்களை ஒரு மாத காலம் உழைத்துத் தொகுத்துள்ளேன். ஸ்டாலின் ஆட்சியில் தூத்துக்குடி சிறுமி வன்கொடுமைக் கொலை, எனப் பல கொடூரங்கள் நடந்ததாக குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி
மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஸ்டெர்லைட் பணத்திற்காகப் போலீஸார் கூலிப்படையாக மாறி 16 அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றனர். யார் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டது என்பது குறித்து எந்த மேடையிலும், எந்தத் தேதியிலும் திமுக ஜாம்பவான்களுடன் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்" எனச் சவால் விடுத்தார்.
விஜய் ஆட்சி
தற்போதைய அரசு மற்றும் நிர்வாகம் குறித்துக் குறிப்பிட்ட வைகோ, "விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய ஆட்சிகளில் பணம் வாங்கிப் பழக்கப்பட்ட சில அரசு அதிகாரிகள், கோப்புகளை நகர்த்தாமல் அரசை ஸ்தம்பிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ஆனாலும், முதல்வர் விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார்.
ரூ 1000 கோடி
எல்லா ஆட்சியாளர்களையும் 500 கோடி, 1,000 கோடி கொடுத்து வளைத்துப் போட்ட ஸ்டெர்லைட் அதிபர் அனில் அகர்வாலால், முதல்வர் விஜய்யைச் சந்திக்கக் கூட முடியவில்லை. ஸ்டெர்லைட் நிறுவனம் 'கிரீன் காப்பர்' என்ற பெயரில் மீண்டும் வர முயல்வதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நானும் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.
திருப்பரங்குன்றம்
மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சிறுபான்மையினர் மற்றும் நடுநிலையாளர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறிய வைகோ, இது தொடர்பாகத் தமிழக அரசு உரிய நேரத்தில் மேல்முறையீடு செய்யும் என்றார்.
சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையைத் தவெக நிர்வாகிகள் தன்னிச்சையாகத் திறந்து வைத்தது குறித்த கேள்விக்கு, "அதிகாரிகள் வராத சூழலில் உள்ளூர் விவசாயிகளைக் காப்பாற்றும் நோக்கில் அவர்கள் திறந்து வைத்ததில் எந்தத் தவறும் இல்லை" என வைகோ பதிலளித்தார்.
மேகதாது அணை
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 28-ம் தேதி தனது தலைமையில் தென்காசியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், கடந்த 2012-ம் ஆண்டிலேயே மேகதாதுவுக்கு எதிராக 10 ஆயிரம் பேரைத் திரட்டிப் போராடிய முதல் கட்சி மதிமுகதான் என்றும் அவர் தெரிவித்தார். மல்லை சத்யாவின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க மறுத்த வைகோ, தந்தை தொடங்கிய கட்சியை மகன் முடித்துவிடுவார் எனக் கூறுபவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.




Click it and Unblock the Notifications
