திமுகவில் பெண் எம்எல்ஏ இல்லை.. கொளத்தூர் தொகுதியில் களமிறங்கும் மேயர் பிரியா? ஆலோசனையில் அறிவாலயம்!
சென்னை: கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக மேயர் பிரியாவை களமிறக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் அதிகரித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பின் ஸ்டாலின் மீண்டும் சட்டசபை செல்ல விரும்பாததால், கொளத்தூர் தொகுதியில் மேயர் பிரியாவை களமிறக்கும் எண்ணத்திற்கு திமுக வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ விஎஸ் பாபு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சுமார் 70 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட சூழலில், நேற்று முன்தினம் விஎஸ் பாபு உயிரிழந்தார். இதனால் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுடன், கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலும் வரலாம் என்று கருதப்படுகிறது.

இதனால் அத்தனை கட்சிகளும் உடனடியாக இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்டாலின் களமிறங்கும் பட்சத்தில், அங்கு திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கும். ஏற்கனவே ஸ்டாலின் தோல்வி காரணமாக அந்த தொகுதியில் ஒரு அனுதாப அலை உள்ளது.
அதேபோல் சட்டசபையிலும் அப்பாவை காணோம் என்று கேட்பவர்களுக்கு, ஸ்டாலின் வந்து பதிலடி கொடுத்தால், திமுகவின் இமேஜ் உச்சத்திற்கு செல்லும். அதுமட்டுமல்லாமல் விஜய் vs ஸ்டாலின் என்று களம் மாறும். தவெக எம்எல்ஏ விஎஸ் பாபுவை விடவும் ஸ்டாலினுக்கான அனுதாபம், தவெக ஆட்சி மீதான அதிருப்தி உள்ளிட்டவை திமுகவுக்கு சாதகமாக மாறக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியில் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஸ்டாலின் தோல்வி அடைந்தார் என்பதால், அதனை எளிதாக திமுகவால் சரி செய்ய முடியும். ஆனால் சட்டசபை செல்ல ஸ்டாலின் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே கொளத்தூர் மக்களுக்கு நன்றி கூறி, நல்ல வேளை என்னை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்று கும்பிடு போட்டார்.
இதனால் ஸ்டாலின் இடத்தில் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கப் போவது யார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதற்கான முதல் பெயராக சென்னை மேயர் பிரியாவின் பெயர் அடிபட தொடங்கி இருக்கிறது. தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதோடு, மக்களிடையே நல்ல பெயரும் பிரியாவுக்கு உள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக இளம் வேட்பாளர்களை தான் களமிறக்கியது.
இதனால் இளம் வேட்பாளரான பிரியாவுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பின் முன்னாள் அமைச்சர்களான சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அமைதியாகிவிட்டனர். ஆனால் மேயர் பிரியா தொடர்ச்சியாக தவெகவை சிறப்பாக கையாண்டு வருகிறார். திமுகவில் பெண் எம்எல்ஏ-க்கள் இல்லாத சூழலில், மேயர் பிரியாவை சட்டசபை கொண்டு வர முயற்சிகள் நடக்கும் என்றும் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications
