தமிழக முதலீடுகள் ஆந்திராவுக்கு மாறுகிறதா? நாரா லோகேஷ் கிண்டல்.. அமைச்சர் கீர்த்தனா பதிலடி
சென்னை: தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக எழுந்துள்ள சர்ச்சையானது இப்போது, இரு மாநில அமைச்சர்களின் சோஷியல் மீடியா பதிவுகளால் கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் முதலீட்டு ரகசியம் கசிந்துவிட்டதாக எழுந்த புகார்களுக்கு மத்தியில், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டார். உடனே இதற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது பாணியில் பதிலளித்துள்ளார். அதனை இங்கே பார்ப்போம்..!!
இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் சமீப காலமாகவே, ஆந்திராவுக்கு அதிக தொழில் நிறுவனங்கள் செல்வதாக கூறப்படுகிறது. அதாவது, தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு மடைமாறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தின் தொழில் முதலீடு தொடர்பான ரகசிய தகவல்கள் ஆந்திராவுக்கு கசிந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் இருந்து 15 பேர் நீக்கப்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் ஆந்திர தொழில்துறையில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழகத்தின் முதலீட்டு விவரங்கள் ஆந்திராவுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.
கைடன்ஸ் விளக்கம்
ஆனால், இந்த தகவல்களை கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் மறுத்தது. இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் பணியில் இருந்து விலகுவது சாதாரணமான நிகழ்வுதான் என்று தெரிவித்திருந்தது. சிறந்த வேலை வாய்ப்புகள், உயர்கல்வி, இடமாற்றம், குடும்ப பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட மற்றும் தொழில் காரணங்களுக்காக ஊழியர்கள் விலகுவதாகவும் விளக்கியிருந்தது.
வேறு இடங்களில் வாய்ப்புகளைத் தேர்வு செய்யும் ஊழியர்களின் தொழில் லட்சியங்களையும் மதிப்பதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு எப்போதும் ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான போட்டியையே கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
ஆந்திர அமைச்சர் கிண்டல்
இப்படி தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் அண்டை மாநிலத்துக்கு கசிந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், "ஆந்திர பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துள்ளது. அது என்னவென்றால், "முதலீட்டாளர்களுக்கு அன்றே பதில் அளிப்பதாகும்.. தாராளமாக நீங்களும் இதை காப்பி அடித்துக் கொள்ளலாம்" என்று தமிழ்நாட்டை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார்.
அதாவது, முதலீட்டாளர்கள் தொடர்புகொண்டால், உடனடியாக அவர்களுக்கு தேவை பதில்தானே தவிர, காலம் தாழ்த்துவது கிடையாது என்ற ரீதியில் கேலி செய்திருந்தார்..
ஏற்கனவே தமிழ்நாட்டில், தொழில் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் பரவி கொண்டிருக்கும்போது, ஆந்திர அமைச்சரின் இந்த கிண்டல் பேச்சு, மேலும் சலசலப்பை தந்துவிட்டது..
அமைச்சர் கீர்த்தனா பதில்
இதையடுத்து, நாரா லோகேஷின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "விரைவான பதில்கள் நல்லதுதான்; ஆனால், அதைவிட வேகமான செயல்பாடு? அதைவிடச் சிறந்தது.. தமிழ்நாடு, "வெற்றி" முதலீடு மற்றும் செயல்பாட்டு மாநாடு 2026-ன் இரண்டாவது பதிப்பிற்குத் தயாராகி வருகிறது.. நமது இலக்கு மிகத் தெளிவானது.. முதலீட்டு உறுதிமொழிகள், அவற்றை செயல்படுத்துவதற்கான இலக்குகள், களத்தில் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையின் கீழ், முதலீட்டு ஒப்பந்தங்களை நிஜமான வளர்ச்சியாக மாற்றுவதிலும், களத்தில் உறுதியான பலன்களை வழங்குவதிலும் நாங்கள் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். இன்னும் 4 நாட்களே உள்ளன! 25 நவம்பர் 2026" என்று பதிவிட்டிருக்கிறார்.




Click it and Unblock the Notifications
