தூத்துக்குடி, டுட்டிகோரின்! வேறு மாவட்டங்களா? கீர்த்தனா வெளியிட்ட முதலீட்டு சாதனை லிஸ்ட்டில் சோதனை!
சென்னை: தவெக ஆட்சியில் கடந்த 6 மாதங்களில் 112 தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மாவட்ட வாரியாக ஒரு லிஸ்ட் வெளியிட்டார். அதில், தூத்துக்குடியையும், அதன் ஆங்கில உச்சரிப்பான டூட்டிகோரின் என்பதையும் வெவ்வேறு மாவட்டங்களாக குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த 6 மாத காலத்தில் தொழில்துறையில் தவெகவின் சாதனைகளை அமைச்சர் கீர்த்தனா பட்டியலிட்டுள்ளார்.

தவெகவின் 6 மாத கால ஆட்சியில் ரூ 1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என அவர் விரிவான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முதலீட்டு உறுதிமொழிகள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) முதலீடுகள் குறித்து முதல் கட்ட ஆய்வை தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட எல்லா நிறுவனங்களின் தகவல்களையும் விரிவாக பகிர்கிறேன்.
112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்த 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ 1,14,811 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த முதலீடுகள் எல்லாம் வெறும் ஒப்பந்தங்களாக காகிதங்களில் மட்டுமல்லாமல் செயல்வடிவமும் பெற்று வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். இதுதான் முதல்வர் விஜய்யின் முக்கிய நோக்கமாகும்.
83 ஒப்பந்தங்களுக்கு செயல்வடிவம்
இந்த 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் திட்டங்களாக மாற்றப்பட்டு அடுத்தகட்ட செயல்பாடுக்கு வந்துள்ளதால் ரூ 59,485 கோடி முதலீடு உறுதியாகிவிட்டது. ஜவுளி, ஆட்டோமொபைல், உற்பத்தித் துறை, எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நம்பிக்கைக்குரிய தமிழகம்
எனவே தமிழகம் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக மாறிவிட்டது. முதல்வர் விஜய்யின் தலைமையிலான ஆட்சியில்தான் தொழில்துறை வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக MoUs
இந்த ட்வீட்டில் அவர் மாவட்ட வாரியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சென்னையில் 10, கோவையில் 9, கடலூர், திண்டுக்கல், கரூர், நாகை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 1, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 ஒப்பந்தங்களும் என ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டு கீர்த்தனா, தூத்துக்குடி மாவட்டத்தில் 7 ஒப்பந்தங்களும் டுட்டிகோரின் மாவட்டத்தில் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டும் வேறு வேறா?
அதாவது தூத்துக்குடி என்றாலும் டுட்டிகோரின் என்றாலும் ஒன்றுதான். ஆங்கிலத்தில் டுட்டிகோரின் (Tuticorin) என அழைக்கப்படுகிறது. ஆனால் இவற்றை இரு மாவட்டங்கள் போல் Thoothukudi, Tuticorin என குறிப்பிட்டுள்ளது கேலிக்குள்ளாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கீர்த்தனாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்து Thoothukudi, Tuticorin ஆகிய இரண்டும் வெவ்வேறு மாவட்டங்கள் என அறியப்பட்ட நாள் இன்று என கிண்டலடித்து வருகிறார்கள். பிரிண்ட் மிஸ்டேக் என்றாலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. ஒரு அமைச்சர் இது போன்ற முக்கிய தகவல்களை பொதுவெளியில் பகிரும் போது ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்துவிட்டு அனுப்பியிருந்திருக்கலாம். ஏற்கெனவே தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லாம் ரசிகர்கள், அவர்களுக்கு நிர்வாகம் நடத்த தெரியாது என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில் கீர்த்தனா ஒரு பட்டியலை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications
