போலி ஆப்பிள் ஐபோன்.. சென்னை ரிச்சி தெருவில் அப்படியே ஒரிஜினல் மாதிரியே.. மொத்தமாக சிக்கிய கும்பல்
சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் உள்ள சில கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் பொருட்களைப் போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு சென்று சோதித்த போலீசார், போலியாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்களையும், அதன் உதரி பாகங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை ஊழியர்கள் 6 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
சென்னை சூளைமேடு சங்கரியார் காலனியைச் சேர்ந்த 49 வயதாகும் குமரவேல் என்பவர், கிரிப்பின் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் சென்று அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறுகையில், நான் வேலை பார்க்கும் கிரிப்பின் நிறுவனம் என்னிடம், ஆப்பிள் ஐபோன் நிறுவனம், ஆப்பிள் ஐபோன் போன்று போலி பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் கடைகளை கண்காணித்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது.

அந்தவகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் போலி பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து காவல்துறையினரிடம் எங்கள் நிறுவனம் சார்பில் ஒப்படைத்து வருகிறோம். அந்தவகையில் எங்களுக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் உள்ள சில கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் பொருட்களைப் போன்று போலியாக தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனுப்பி விசாரித்தோம். அவர்களின் விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்தது. எனவே, குறிப்பிட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கடைகளின் விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
ஆப்பிள் போனை போலியாக தயாரித்து விற்பதாக கூறப்பட்ட புகார் குறித்து விசாரிக்க சிந்தாதிரிப்பேட்டை போலீசார் குறிப்பிட்ட கடைகளுக்கு சென்றார்கள். அங்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணை முடிவில், ஆப்பிள் ஐபோன் மற்றும் உதிரி பாகங்கள் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. அதன் அடிப்படையில், கடை ஊழியர்கள் லட்சுமண்குமார் (27), உமிது (28), கிஷோர் (22), ரவீந்தர் (35), அர்ஜூன் (22) இந்தர்சிங் (22) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ஹோரிசிங், ரமேஷ் பூரி, ராஜ்குமார் ஆகிய 3 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர். அதேநேரம் அங்கு போலியாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்களும், உதரி பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன்தான் போலியாக தயாரிக்க முடியாதது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆப்பிள் போனை போலியாக தயாரிக்க முடியும் என்று ரிச்சி தெருவில் சிலர் நிரூபித்திருப்பது ஆப்பிள் ஐபோன் பிரியர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.
அதேநேரம் ஆப்பிள் ஐபோனை பற்றி பலருக்கும் தெரியாத சில உண்மைகள் உள்ளன. ஆப்பிள் ஐபோன் என்பது தனி பிராண்ட் என்றாலும் அதில் உள்ள உதிரி பாகங்கள் எல்லாமே பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை ஆகும். ஐபோனில் உள்ள கேமராவை தயாரிப்பது சோனி நிறுவனம் ஆகும் . அதேபோல் தைவான் செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான டிஎஸ்எம்சி (TSMC), ஆப்பிள் ஐபோன்களுக்கான சிப்செட்டுகளைத் தயாரித்து வழங்குகிறது.
ஐபோன் சிப்செட் வடிவமைப்பை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிக் கொடுக்கிறது. அதன்படி, சிப்செட்டுகள் தைவானில் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்தியாவில் ஐபோன் பேட்டரிகளை ஜப்பானிய நிறுவனமான டிடிகே (TDK) தயாரித்து தருகிறது. அதேபோல் ஐபோனில் பயன்படுத்தப்படும், பெரும்பாலான OLED டிஸ்ப்ளேக்களை சாம்சங் நிறுவனம் தான் (Samsung Company) உற்பத்தி செய்கிறது. இதற்கு அடுத்தபடியாக எல்ஜி நிறுவனம் வழங்கி வருகிறது. சீனாவின் BOE நிறுவனம் ஐபோனுக்காக OLED திரைகளை கணிசமாக தயாரித்து வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications