காசு கம்மி.. டிரைவிங் லைசென்ஸ் வீடு தேடி வருது.. ஆர்டிஓ ஆபீஸுக்கே இனி போக வேணாம்.. மக்கள் நிம்மதி
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக அரசு எத்தனையோ வழிவகைகளை செய்து தருகிறது. அந்தவகையில், டிரைவிங் லைசென்ஸ் பெறுவதிலும், புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. என்ன அது?
ஒவ்வொரு வாகன உரிமையாளர்களும், டிரைவிங் லைசென்ஸை, கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. காரணம், ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சியே இதுஒன்றுதான்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட வண்டி ஓனருக்கு, போக்குவரத்து சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் இது ஒன்றுதான்.

ஒருவேளை, ஓட்டுநர், வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும்.. அதனால்தான், வாகன ஓட்டுநர் உரிமம் என்பது எல்லாருக்குமே அவசியமான ஆவணமாக திகழ்கிறது.
அடையாள அட்டை: அதேபோல, வாகன ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமானால், 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்... இலகு ரக வாகனங்கள் அதாவது, பைக், ஆட்டோ, கார் போன்றவை இலகு ரக வாகனங்களை பயன்படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும்.. இதற்கு குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், கல்வித் தகுதி எதுவுமே தேவையில்லை.
டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டுமானால், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் என்று சொல்லலப்படும் ஆர்டிஓ ஆபீசுக்கு சென்று வாங்க வேண்டும். இதற்காக ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி, நேரத்தில் அங்கு சென்று எல்எல்ஆர் என்று சொல்லப்படும் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற வேண்டும்.
இடைவெளிகள்: பிறகு ஒரு மாத இடைவெளிக்குப்பிறகு, காலையில் வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டிக்காட்ட வேண்டும். போட்டோ எடுத்துகொண்ட பிறகு, சாயங்காலம், ஓட்டுனர் உரிமத்தை நேரில் சென்று வாங்கி கொள்ள வேண்டும். இப்படித்தான் டிரைவிங் லைசென்ஸ்ஸை பொதுமக்கள் இத்தனை காலமும் பெற்று வருகிறார்கள். ஆனால், இந்த நடைமுறையில், புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, இனிமேல் டிரைவிங் லைசென்ஸ், விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு வரப்போகிறதாம்.. அதுவும் தபாலில் அனுப்பும் வசதி இன்று முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர், வண்டியை ஓட்டிக்காட்டி தேர்ச்சி அறிவித்த பிறகு, ஓட்டுனர் உரிமம் பெற வேண்டியதில்லை.. இதற்காக அலையத்தேவையில்லை.. வீட்டுக்கே லைசென்ஸ் வந்துசேர்ந்துவிடும்.
கட்டணம்: இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணம் மட்டுமே இதற்கு செலுத்தினால் போதும். ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச்சான்றிதழும் (ஆர்சி புக்) தபால் மூலமே உங்களுக்கு கிடைத்துவிடும்.
ஒருவேளை விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முகவரி தவறாக இருந்தாலோ, அல்லது விண்ணப்பதாரர் வீட்டில் இல்லையென்றாலோ, ஆர்டிஓ ஆபீசுக்கே அந்த டிரைவிங் லைசென்ஸ் திரும்பி வந்துவிடும்..
மகிழ்ச்சி: விண்ணப்பதாரர் ஆர்டிஓ ஆபீசுக்கு சென்று, சரியான சுயவிலாசம் எழுதிய தபால் உறையை அலுவலகத்தில் தந்தால், அதற்கு பிறகு, மறுபடியும் வீட்டுக்கு தபால் மூலம் டிரைவிங் லைசென்ஸ் அனுப்பி வைக்கப்படுமாம். வீடு தேடி வந்து டிரைவிங் லைசென்ஸ் தரப்படும் இந்த வசதியானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications