பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே? கண்ணீருடன் கேட்ட மனைவி! காலையில் ஏர்போர்ட்டில் கிடைத்த விடை ’அங்கு’ விசாரணை
சென்னை : பெண் காவலர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இன்று காலை சென்னை அழைத்து வந்த போலீசார், திருச்சியில் வைத்து விசாரிக்கின்றனர்.
பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பாய்ந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் கைது: சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெலிக்ஸ் ஜெரால்டு: இதற்கிடையே சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து அவர் பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசும் வகையில் கேள்வி கேட்டதாக பெலிக்ஸ் ஜெரால்டு மீது குற்றம் சாட்டப்பட்டது . இதையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது நீதிபதி குமரேஷ் பாபு கடுமையான கண்டனங்களை கூறியிருந்தார்.
நொய்டாவில் கைது: மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும். நேர்காணல் தர வருபவர்களை அவதூறு கருத்துக்களை கூற தூண்டும் விதமாக பேட்டி எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதை அடுத்து ஜெரால்டின் முன் ஜாமின் மனு குறித்து அடுத்த வாரம் பதில் அளிக்க காவல்துறைக்கு உத்திரவிடப்பட்டது. இந்நிலையில் முன் ஜாமின் மனு நிலுவையில் இருக்கும் போது பெலிக்ஸ் ஜெரால்டு தலைமறைவானார். அவர் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நொய்டா பகுதியில் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்
மனைவி கண்ணீர்: நேற்று வரை அவர் சென்னை அழைத்து வரப்படவில்லை. இதை அடுத்து எனது கணவரை காணவில்லை எனவும் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி கண்ணீருடன் கூறியிருந்தார். மேலும் எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள் எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என தெரியவில்லை சவுக்கு சங்கரை போல எனது கணவர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என வீடியோ வெளியிட்டு இருந்தார்.
திருச்சியில் விசாரணை: அந்த வீடியோ வைரலான நிலையில் இன்று காலை பெலிக்ஸ் ஜெரால்டு சென்னை அழைத்துவரப்பட்டார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஃபெலிக்ஸ் ஜெரால்டை சென்னை அழைத்து வந்த போலீசார் திருச்சி அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதற்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications