முதலில் விஜயை தான் காப்பாற்ற வேண்டும்! அப்செட்டான நடிகர் தாடி பாலாஜி.. வாட்ஸ்அப் ஸ்டேட்டசால் சர்ச்சை
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாடு முடிந்த நிலையில் அந்த கட்சியை சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி ,‛‛தமிழகத்தை காக்க வந்த தலைவா! முதலில் உங்களுடன் இருப்பவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற வேண்டும்'' என வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சர்ச்சையை கிளப்பியது. இதுபற்றி அவர் ஆதங்கத்தோடு அளித்த விளக்கம் மீண்டும் பேசும் பொருளாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. மதுரை பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் ‛ரேம்ப் வாக்' செய்து மேடைக்கு வந்து பேசினார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். ஊழல் கட்சி என்று சாடினார்.
ஸ்டாலினை அங்கிள் என அழைத்த விஜய்
முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று கூறி பரபரப்பை பற்ற வைத்தார். மேலும் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று விஜய் பேசினார். இதுதவிர ஆளும் திமுகவை தான் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தாடி பாலாஜி ஸ்டேட்டஸ்
இது தவெக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் தாடி பாலாஜி தனது வாட்ஸப்பில் வைத்த ஸ்டேட்டஸ் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தாடி பாலாஜி தவெகவில் சேர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் அவர் தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில், ‛‛ தமிழகத்தை காக்க வந்த தலைவா! முதலில் உங்களுடன் இருப்பவர்களிடமிருந்து உங்களை காப்பாற்ற வேண்டும்.. இப்படிக்கு நண்பன்'' என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பியது.
தாடி பாலாஜி விளக்கம்
இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நிருபர் தாடி பாலாஜியிடம் அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு தாடி பாலாஜி, ‛‛சாருக்கு (விஜய்க்கு) சரியான வழிக்காட்டுதல் இல்லை. சார் என்ன பேசுவார் என்பதை பார்க்க இவ்வளவு பேர் வந்தனர். ஆனால் அவரது பேச்சு ரொம்ப டல்லாக இருந்தது. சாரின் முதல் மாநாடு பவர்புல்லாக இருந்தது. ஆனால் இது அப்செட் தான். எனக்கு தனிப்பட்ட முறையில் அப்செட்டாக உள்ளது’’ என்றார்.
இதையடுத்து நிருபர், ‛‛யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்?’’ என நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு தாடி பாலாஜி, ‛‛அவருடன் யார் யார் இருக்கிறார்? என்பது நமக்கு தெரியாது. யார் யார் உடன் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அதனை கவனிப்பது என் வேலையும் இல்லை.
குழப்பத்தில் விஜய்
சாரை பற்றி 100 சதவீதம் எனக்கு தெரியும். அவரது முடிவுகள் சரியாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக அவரது முடிவுகள் குழப்பமாக உள்ளது. பாவம்.. ஒன்னும் இல்லாத பாலாஜிக்கே பல பிரச்சனைகள் இருக்கும்போது கட்சி ஆரம்பித்து இருக்கும் அவருக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்?. அவங்க அப்பா, அம்மாவுக்கு இருக்கும் ஆதங்கம் தான் எனக்கும் உள்ளது.
பார்க்க அனுமதியில்லை
அவரை பார்க்கவே முடியாத நிலை உள்ளது. தனிப்பட்ட முறையில் பேசவே முடியாத நிலை உள்ளது. அவரை பார்க்கவே அனுமதிக்கவில்லை. நான் அவரை பார்க்க 2, 3 முறை முயற்சி எடுத்தேன். பார்க்கலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். பார்க்கும் நாளில் ‛ஒன் டூ ஒன்’ பேச வேண்டும்’’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது பேசும் பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications