உடலை தானம் செய்த முதல் முதல்வர்!உறுப்பு தானத்திற்கு அரசு மரியாதை.. நடைமுறை எப்போது?
சென்னை: 'உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!' என்று கடந்த 22 ஆம் தேதி அதிரடியான ஓர் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த அறிவிப்பால் புதிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பல தாங்கள் உறுப்பு தானம் செய்த சான்றிதழை வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அரசியல் களத்தில் மாற்றுக் கருத்து கொண்டிருக்கும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள்கூட முதல்வரின் இந்த அறிவிப்பை மனம் திறந்து பாராட்டி உள்ளனர்.
முதல்வரின் இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும்? தமிழ்நாட்டு உறுப்பு தானத்தில் எப்படி உள்ளது?.. என்ற பல கேள்விகளோடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். அவர், "முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு.கருணாநிதிதான் உடல் உறுப்புத் தினம் என ஒன்றை அறிவித்தார்.
குறிப்பாக 2008 செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி திருப்போரூர் பக்கம் ஹிதேந்திரன் என்ற மாணவர் இருசக்கர வாகன விபத்தில் மரணமடைந்தார். அந்த மாணவரின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். ஆகவே, மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உறுப்புகளை தானம் செய்தனர். அந்தப் பெற்றோரைக் கலைஞர் அழைத்துப் பாராட்டினார்.

இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அன்று நேரடியாகத் திருப்போரூர் சென்று அந்தப் பெற்றோரைப் பாராட்டி, ஊக்குவித்தார். அன்றையிலிருந்து உறுப்புதான தினம் என்பதைச் செப்டம்பர் 23 அன்று அரசு கடைப்பிடித்து வருகிறது.
ஆனால், ஒன்றிய அரசு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உடல் உறுப்பு தினத்தைக் கடைப்பிடித்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹிதேந்திரனின் மறைந்த தினத்தைத்தான் நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
இதற்கு முன்னதாக முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தில் இரண்டு விதமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தன.

ஆனால், இப்போது இதய மாற்று அறுவை சிகிச்சை, கணைய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று, எலும்பு மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை, கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை என 8 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நாம் புதியதாகச் சேர்த்திருக்கிறோம்.
அதைப்போன்று முன்னதாக தமிழ்நாட்டில் 13 மருத்துவக் கல்லூரிகளுக்குத்தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டிருந்தது.
இப்போது முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி கூடுதலாக 27 கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாடு முதல் இடத்திலிருந்துவருகிறது.

அதனடிப்படையில் தான் கடந்த இரண்டு மாதங்கள் முன்னதாக தமிழ்நாடு சிறந்த மாநிலம் என்ற விருதை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுள்ளது.
இதற்கு எல்லாம் முன்னோடியாக முதல்வர் ஸ்டாலின் தனது உடலை தானம் செய்து இருக்கிறார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின்கூட உடலை தானம் செய்திருக்கிறார் என்பது இங்கே மிக முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின் இருந்து, இத்திட்டத்தில் அதிக அக்கரை காட்டி வருகிறார். ஆகவேதான் இப்போது உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மிகப் பெரிய அங்கீகாரம்.

முதல்வர் அறிவித்த உடனேயே இந்தத் திட்டம் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது" என்கிறார்.
மேலும் முதல்வரின் அறிவிப்பு பற்றி மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர் டாக்டர் அமலோற்பவநாதன், "உறுப்பு தானம் செய்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால், நமக்குத் தேவை அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இதுதான் நிலை.
முதலில் நாம் வியாதிகளைத் தடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. உதாரணமாக கிட்னி பிரச்சினையை எடுத்துக் கொண்டால் 50% சர்க்கரை வியாதியால் வருகிறது. இரத்த அழுத்தத்தினால், சர்க்கரை வியாதி வருகிறது.

இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசு 'மக்களைத் தேடி மருத்துவம்திட்டத்தைக் கொண்டுவந்தது. வியாதியைத் தடுத்துவிட்டாலே உறுப்பு தானத்தின் தேவையைக் குறைக்கமுடியும். அதுதான் நமக்கு முன் உள்ள முதல் படி. உறுப்பு தானத்தின் மிக்க முக்கியமான பாடம் இதுதான்.
இதற்கு அடுத்தபடி உறுப்பு தானாம் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவது. இதன்மூலம் அதிக மக்கள் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்பை தானம் செய்ய முன்வருவார்கள். அதன் மூலம் நம் பற்றாக்குறையை நாம் சரி செய்ய முடியும்" என்கிறார்
உறுப்பு தானத்தில் முன்னோடியான ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன், "பல பள்ளிகளுக்குச் சென்று நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். என் மகனுக்கு அவன் மரணமடையும் போது 15 வயதுதான்.
நான் தூங்கிக் கொண்டிருந்தபோது எனக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டான். அப்போதுதான் விபத்து நடந்தது. அதைச் சொல்லிப் பல தந்தைகள் மற்றும் குழந்தைகளிடம் கையெடுத்துக் கும்பிட்டு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறேன். என் நிலைமை இனி எந்தப் பெற்றோருக்கும் வரக் கூடாது.
இன்றைக்கு முதல்வர் உறுப்பு தானம் செய்பவர்கள் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என அறிவித்துள்ளார். இது ஒரு சிறப்பான அறிவிப்பு" என்கிறார்












Click it and Unblock the Notifications