LPG சிலிண்டர் டெலிவரியில் முக்கிய கட்டுப்பாடு.. இனி இதுதான் கேஸ் புக்கிங் ரூல்ஸ்..!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தாக்குதல் பதற்றம் குறைந்தும், பேச்சுவாத்தை மத்தியிலான இழுவை தொடர்ந்து நீடித்து வரும் வேளையில் உலகளாவிய எரிசக்தி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில் இருப்பதால், பல நாடுகளில் எரிபொருள் விநியோக சங்கிலி சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த தாக்கம் தற்போது இந்தியாவின் அத்தியாவசிய சமையல் எரிவாயு விநியோக முறையிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

இதில் முக்கியமாக, இனிமேல் OTP இல்லையெனில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது என்ற புதிய நடைமுறை நாடு முழுவதும் அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் நாட்டில் பல பகுதிகளில் மக்கள் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
OTP கட்டாயம்: கேஸ் பெற புதிய டிஜிட்டல் விதிமுறை
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் தற்போது Delivery Authentication Code (DAC) அடிப்படையிலான விநியோக முறையை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
இந்த முறையின் கீழ், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். சிலிண்டர் வீட்டிற்கு வரும் நேரத்தில் அந்த OTP-ஐ வழங்கினால் மட்டுமே சிலிண்டர் டெலிவரி செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முன்பு நகரங்களில் மட்டுமே கடுமையாக பின்பற்றப்பட்டு வந்த இம்முறை தற்போது டிவுன், சிறு கிராமம் வரையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சமீபத்திய தகவலின்படி, தற்போது சுமார் 95 சதவீத எல்பிஜி விநியோகங்களும் DAC அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றன. வெறும் 5 சதவீத டெலிவரி மட்டும் OTP இல்லாமல் நடப்பதாக விளக்கியுள்ளது.
இதனால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் செயல்பாட்டில் இல்லாதவர்கள் அல்லது OTP பெற முடியாதவர்கள் சிக்கலை சந்திக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஏன் இந்த புதிய கட்டுப்பாடுகள்?
மேற்கு ஆசிய போர் காரணமாக உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிக்க இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் எரிபொருள் தேவையின் பெரும்பகுதி இறக்குமதியை சார்ந்திருப்பதால், விநியோக தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு ஏற்பட்டால் அது நேரடியாக உள்நாட்டு சந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதனால் எல்பிஜி சிலிண்டர்களை கள்ளச்சந்தை விற்பனை செய்யப்படுகின்ற, தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான சேமிப்பு மற்றும் தவறான விநியோகத்தை கட்டுப்படுத்த டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
21 நாட்களில் இருந்து 25 நாள், 45 நாள் இடைவெளி
முன்னதாக அனைத்து வாடிக்கையாளர்களும் 21 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு புதிய எல்பிஜி சிலிண்டரை பதிவு செய்ய முடிந்தது. ஆனால் தற்போதைய புதிய விதிகளின்படி அந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள், முந்தைய சிலிண்டர் வாங்கிய 25 நாட்களுக்குப் பிறகே புதிய முன்பதிவு செய்ய முடியும். அதே நேரத்தில், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
அதிகம் பாதிக்கப்படப்போகிறவர்கள் யார்?
புதிய OTP நடைமுறை மற்றும் ரீஃபில் இடைவெளி விதிகள் குறிப்பாக முதியவர்கள், ஸ்மார்ட்போன் வசதி இல்லாதவர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சவாலாக மாறக்கூடும். பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் பழையதாக இருப்பது, குடும்ப உறுப்பினர்களின் எண்ணில் இணைக்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் OTP பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம்.
கிராமப்புறங்களில் இணைய வசதி மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், ஆன்லைன் முன்பதிவு மற்றும் OTP சரிபார்ப்பு முறைகள் அங்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
மோடியின் அறிவுரை
சமீப காலமாக பெட்ரோல், டீசல், எல்பிஜி மற்றும் அத்தியாவசிய எரிசக்தி வளங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி கூட எரிபொருள் பயன்பாட்டை சிக்கனமாக மேற்கொள்ள வேண்டும், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், LPG விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இந்தியா மெதுவாக "Fuel Conservation Mode" எனப்படும் எரிபொருள் சேமிப்பு நிர்வாக முறைக்குள் நகர்கிறது என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications