ஆடியோ விவகாரத்தில் பொய்! தலைவராக இருந்தாலும் கடவுள் விடமாட்டார்! என்னங்க காயத்ரி இப்படி சொல்கிறார்?
சென்னை: பொய் சொன்னால் கடவுள் விடமாட்டார், சிறந்த தலைவராக இருந்தாலும் பொய் எப்போதும் தோல்வியடையும் என பாஜகவிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகள் திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகியோரின் ஆடியோ உரையாடல் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தரக்குறைவாக பேசிக் கொண்டது வெளியானது.
பிறப்புறுப்பை அறுத்து மெரினாவில் வீசிவிடுவேன் என டெய்சிக்கு திருச்சி சூர்யா சிவா மிரட்டல் விடுத்திருந்தார். இந்த ஆடியோ சாட்டிங்கிற்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அண்ணாமலை பரிந்துரைத்தார்.

திருச்சி சூர்யா சிவா
இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும் என்றும் பெண்ணை தரக்குறைவாக பேசிய அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் ட்வீட் போட்டிருந்தார். இதனிடையே தமிழக பாஜக நிர்வாகி செல்வக்குமாருக்கும் காயத்ரிக்கும் இடையே டிவிட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருச்சி சூர்யா குறித்த கமென்ட்டையும் காயத்ரி செய்திருந்தார்.

காயத்ரி ரகுராம்
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். இதை ஏற்பதாக காயத்ரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த காயத்ரி, நான் பாஜகவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை என் சொந்த செலவில் நிறைய பேருக்கு உதவிகளை செய்துள்ளேன்.

காசி தமிழ் சங்கமம்
வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக உள்ள என்னை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவே இல்லை. இதனால் மன வருத்தமடைந்து வேதனையில் ட்வீட் போட்டேன். மற்றபடி நான் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படவில்லை. என் மீது வீண் குற்றச்சாட்டு.

3 மாதங்களுக்கு முன்பு
கட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த செல்வக்குமாரின் பேச்சை கேட்டு கொண்டு எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றார். அண்ணாமலை உங்களுக்கு எதிராக சதி செய்கிறாரா என கேட்டதற்கு அவர் எனக்கு தெரியாது என காயத்ரி கூறியிருந்தார். காயத்ரி பாஜகவுக்கு எந்த மாதிரியான துரோகத்தை செய்தார் என்பது குறித்து பாஜக நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

காயத்ரி அறிக்கை
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் இன்றைய தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் திருச்சி சூர்யா சிவா- டெய்சி ஆடியோவை நான் வெளியிட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். எனவே யார் அந்த வேலையை செய்தார்கள் என்பது கண்டறிய வேண்டும். இதை தலைவர் அண்ணாமலை நித்தியம் கண்டுபிடிப்பார் என குறிப்பிட்டிருந்தார்.

தொடர் ட்வீட்
அது போல் அவர் வெளியிட்ட தொடர் ட்வீட்டில் உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன். ஆனால் இப்போது கருத்துகளைப் படிக்கிறேன். ஏன் இவ்வளவு வெறுப்பு? படித்ததை பிடித்தது, இது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்று நினைத்தேன். பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார். பிறர் வாழ்வில் விளையாடும் எவரையும் கடவுள் விடமாட்டார். ஒரு நாள் உண்மை வெளிவரும், அப்படித்தான் தண்டிக்கப்படுவீர்கள். விரைவில் அல்லது பின்னர் அது நடக்கும். பொய் சொல்லி ஒருவரை சீரழிப்பவர்கள், உண்மையை அறியாமல், வதந்தியை ஆதரிப்பதும் அதர்மமாகும்.

அரசன் அன்று கொல்வான்
நீங்கள் ஒரு இந்துவாக இருந்தாலும் சரி, சிறந்த தலைவராக இருந்தாலும் சரி, பெரிய துறவியாக இருந்தாலும் சரி பொய்கள் எப்போதும் தோல்வியடையும். உண்மை தெரியாமல் வதந்தி பரப்புவோரை கடவுள் நிச்சயம் தண்டிப்பார். குற்றவாளி விரைவில் வெளியே வருவார். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications