ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியது ஏற்புடையதல்ல! கொந்தளித்த ஜி.கே.வாசன்
சென்னை: தமிழக ஆளுநர் ஜி.கே.வாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாக பாடப்பட்டது ஏற்புடையது அல்ல என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்துப்பாடல் தவறாகப் பாடப்பட்டது ஏற்புடையதல்ல,

இனிவரும் காலங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல், தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது.
இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் இல்லாதவாறு பாடுவதற்கு சரியாக, முறையாக ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.
நிகழ்ச்சி நடத்துவோர் ஒத்திகை நடத்தி தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை சரியாகப் பாடி தமிழுக்கு உரிய பெருமை சேர்க்க வேண்டும்.
எனவே தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முறையாக, சரியாக, முழுமையாகப் பாடுவதே தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டமும் டிடி தொலைக்காட்சியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் திக்கி திணறி பாடிய நிலையில் "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது கண்டனத்தில் , " திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியிருந்தார்.
அது போல் துணை முதல்வர் உதயநிதி, மநீம கமல்ஹாசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். கமல்ஹாசன் தனது பதிவில், திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. அரசியல் செய்வதாக நினைத்து "திராவிட நல்திருநாடு" எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார். அந்த வகையில் தேசிய கீதம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பது போல் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications