கிராமுக்கு நகைக்கடன் ரூ.8100.. வணிக வங்கி போல் கூட்டுறவு சங்கத்திலும் ஒரே வட்டியில் கடன் கிடைக்குமா?
சென்னை: வணிக வங்கிகளில் கிடைக்கும் போல், ஜாமீன் இல்லாத விவசாய கடன் மற்றும் ஒரே வட்டியில் உயர்ந்த நகைக்கடன் வசதிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களிலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடன் பெறுவது இன்னும் எளிதாகும் என்பதால் இப்படியான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுருக்கமாக பார்ப்போம்.
ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வழிகாட்டுதலின்படி, விவசாயிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட கடன்கள் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன.
2 லட்சம் ரூபாய் வரை விவசாய கடன் பெற முடியும்.. இதற்கு எந்த ஜாமீனும் கிடையாது.. வெறுமனே நில உரிமை ஆவணங்கள், விவசாயம் செய்வதற்கான சான்றுகள் இருந்தால் போதும்... ஒருவேளை 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற வேண்டியிருந்தால், வங்கி தரப்பில் உத்தரவாதம் கேட்கலாம்.
மொத்தத்தில் வணிக வங்கிகளிலும் உத்தரவாதம் பெற்றும், உத்தரவாதம் இல்லாமலும் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளுக்கு பேருதவியாய் அமைந்து வருகின்றன..

நில உரிமை ஆவணங்கள்
இதனால் 2 லட்சம் கடனில் வட்டியும் குறைவு.. பயிர் சாகுபடிக்கு தேவையான விதை, உரம், மருந்து, தொழிலாளர் செலவுகளை இந்த பணத்திலேயே சமாளித்து கொள்ள முடியும்.. கிசான் கிரெடிட் கார்டு மூலம் வட்டி சலுகையும் அரசு ஆதரவும் கிடைப்பதால், கடன் திருப்பிச் செலுத்தும் சுமையும் குறைகிறது.இப்படிப்பட்ட சூழலில்தான் வணிக வங்கிகளை போலவே, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்தில், நகைக்கடன் உயர்த்தி, ஒரே வட்டியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..நாமக்கல் மாவட்டம் பேட்டப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் தங்கவேலு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
வணிக வங்கி நகைக் கடன்
அந்த அறிக்கையில், 'கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெற பட்டா, சிட்டா, அடங்கல் பெற்றுவர கூறுகின்றனர். பயிர்கடன் பெற அடங்கல் தேவை என்றால், ஏ.எச்.எச்., கால்நடை பராமரிப்பு கடனுக்கு அடங்கல் தேவையில்லை. விஏஓ அடங்கல் கொடுத்தும், அவற்றை நம்பாமல், பயிருடன், கால்நடைகளுடன் சம்பந்தப்பட்ட விவசாயி நின்று போட்டோ எடுத்து வர அறிவுறுத்துகின்றனர். கால்நடை மருத்துவர் சான்றும் வழங்கப்படுகிறது.சங்கத்தின் விவசாய கடன் பெறும்போதும், ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கடனுக்கும், நிலம் உள்ள கிராமத்தில் உள்ள சங்கத்திடம் இருந்து என்.ஓ.சி., கேட்கின்றனர். ஒருமுறை என்.ஓ.சி., பெற்றால் மீண்டும் சம்பந்தப்பட்ட சங்கத்திடம் இருந்து, என்.ஓ.சி., கொடுத்தால் தான் நிலம் உள்ள கிராம சங்-கத்தில் கடன் பெறமுடியும். எனவே, என்.ஓ.சி., தேவையில்லை.
நகைக்கடன் - ஒரே வட்டியில்
வணிக வங்கிகளில், நகை கடன், 7 சதவீதம் வட்டிக்கும், கிராமிற்கு, 8,100 ரூபாய் என, ஒரு பவுனுக்கு, 64,800 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்தில், கிராமுக்கு, 6,000 ரூபாய், ஒரு பவுனுக்கு, 48,000 ரூபாய், முறையே, 12, 10, 11 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கி, சங்கத்தில், நகைக்கடன் உயர்த்தி, ஒரே வட்டியில் வழங்க வேண்டும்.அனைத்து வணிக வங்கிகளிலும் விவசாய கடன், இரண்டு லட்சம் ரூபாய் வரை, ஜாமீன் இல்லாமலும், இரண்டு முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை ஜாமின் பெற்றும் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல், கூட்டுறவு சங்கங்களிலும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குறைந்த வட்டி , அதிக கடன் தொகை
இந்த கோரிக்கையானது, விவசாயிகளின் கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில், தனியார் வட்டிக்கடன் ஆட்களை நாட வேண்டிய அவசியம் குறையும்... விவசாயிகள் அதிக வட்டி சுமையில் சிக்காமல் தப்பிக்க முடியும்.அதேபோல், கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நகைக்கடன் வரம்பை உயர்த்தி, வணிக வங்கிகளைப் போல ஒரே வட்டியில் வழங்கினால், அவசர தேவைகளுக்கு விவசாயிகள் உடனடியாக பணம் பெற முடியும்... அதிலும் ஒரே வட்டி நடைமுறை வந்தால், கூட்டுறவு அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்... விவசாயிகளின் வருமான நிலைத்தன்மை மேம்பட்டு, கடன் திருப்பி செலுத்தும் திறனும் உயரும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications