சென்னை ஏர்போர்ட்டில் 'கட்டிப்பிடி' வைத்தியம்.. அல்வா கொடுத்தும் ஆப்பு.. சிக்கிய ரூ .45 லட்சம் தங்கம்
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பலத்த சோதனையை மீறி ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கோவிந்தராஜ் என்பவர் கடத்தி வந்துள்ளார் . ஆனால் தங்கத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த கோவிந்தராஜூம் அந்த தங்கத்தை கடத்தி வர சொன்ன திருவல்லிகேணியை சேர்ந்த கலீல் அலியும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் சிக்கியுள்ளனர். உன்னால் நான் கெட்டேன்.. என்னால் நான் கெட்டாய் என்பதாக நடந்துள்ளது.
சென்னை விமான நிலையம் என்பது இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்று. சென்னையில் ஓடும் டவுன் பஸ்களை போல் விமானங்கள் வந்து செல்லும் இடமாகும். சென்னை விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பெரும்பாலன நகரங்களுக்கும் விமானங்கள் வந்து செல்கின்றன. தினசரி பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இடமாக சென்னை விமைன நிலையம் உள்ளது.

இந்நிலையில் அண்மையில் சென்னை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் கடலூர் காஞ்சிரங்குலம் பகுதியை சேர்ந்த 23 வயதாகும் கோவிந்தராஜ் என்பவர் சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்றுவிட்டு, அந்த விமானத்தில் திரும்பி வந்தார்.
சிங்கப்பூர் போனவர் சும்மா வரவில்லை.. பல லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்துள்ளார். ஆனால் அவர், சுங்க சோதனை உள்பட அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக கடந்து விமான நிலையத்தின் வெளிப்பகுதிக்கு தங்கத்துடன் வந்துவிட்டார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த 34 வயதாகும் கலீல் அலி, கோவிந்தராஜிடம் கடத்தி வந்த தங்கத்தை கேட்டுளளார். ஆனால் அவர் தங்கத்தை தராமல் ஏமாற்றி உள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. விமான நிலையத்தில் வெளியே வளாகத்தில் இருவரும், ஒருவரை ஒருவர் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த விமான நிலைய போலீசார், இருவரையும் பிடித்து எதற்கு சண்டை போடுறீங்க என்று விசாரித்தனர்.
விசாரித்த விமான நிலைய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கலீல் அலி தான், தங்கம் கடத்தல் குருவியாக கோவிந்தராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு கலீல் அலியின் நண்பர் கோவிந்தராஜிடம் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்க பார்சலை கொடுத்தனுப்பி இருக்கிறார்.
தங்கத்துடன் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் சென்னை வந்த கோவிந்தராஜ், சுங்கச் சோதனையில் சிக்காமல் ஏமாற்றிவிட்டு வெளியில் வந்து விட்டார். ஆனால் வெளியில் வந்த கோவிந்தராஜ், கலில் அலியிடம் தங்கத்தை கொடுக்காமல் மறைத்து வைத்துக் கொண்டு ஏமாற்றியதால் தகராறு ஏற்பட்டு, இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் பைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கத்தையும் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இத தங்கம் கடத்தல் என்பதால் போலீசார், பறிமுதலான தங்கம் மற்றும் பிடிபட்ட 2 பேரையும் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள், சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த கோவிந்தராஜ் மற்றும் கடத்தல் தங்கத்தை வாங்க வந்த கலீல் அலி ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். விமான நிலையத்தில் சுங்கச் சோதனையில் தங்க பார்சலுடன் எப்படி கோவிந்தராஜ் வந்தார் என்று அவரிடம் சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பல முறை குருவியாக கோவிந்தராஜ் சிங்கப்பூர் போனதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் விசாரிக்கிறார்கள். கடத்திய தங்கத்துடன் வெளியில் வந்து சண்டையிட்டதால் சிக்கிக்கொண்டது சென்னை ஏர்போர்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications