தாம்பரம் மக்களின் கஷ்டம் தீரப்போகிறது.. கிஷ்கிந்தா சாலை குறித்து அமைச்சர் எ.வ.வேலு குட்நியூஸ்
சென்னை: தாம்பரம் கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுமா என்று தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா சட்டமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையில் 1.4 கிலோ மீட்டர் வலது பக்கம் வனத்துறை பகுதியாகவும் இடப்பக்கம் குடியிருப்பு பகுதியாகவும் இருக்கிறது. 4 வழிச்சாலையாக மாற்ற வனத்துறை அனுமதி பெறவும், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், அதன் அடிப்படையில் பணிகள் பரிசீலனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என்றார்,
ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், இப்போது மையப்பகுதி என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தாம்பரத்தை மையமாக வைத்து சுற்றிலும் நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. தாம்பரம் முதல் வேளச்சேரி சாலையிலோ அல்லது செங்கல்பட்டு சாலையிலோ அல்லது ஜிஎஸ்டி சாலையிலோ சென்றால் முழுமையாக நகரமாகிவிட்டது. அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் கிஸ்கிந்தா சாலையிலும் பெரிய அளவில் மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது.

கிஸ்கிந்தா சாலையை பொறுத்தவரை மேற்கு தாம்பரம் வழியாக முடிச்சூரை தாண்டி செல்கிறது. இந்த சாலை மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சாலை என்பதால் இருவழிச்சாலையாகவே உள்ளது. மேலும் சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இந்த சாலையை அகலப்படுத்தினால், முடிச்சூர் வழியாக வருவோர் எளிதாக நகருக்குள் வந்து செல்ல முடியும்.தற்போது நெருக்கடி காரணமாக அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, "தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையில் 1.4 கி.லோ மீட்டர் வலது பக்கம் வனத்துறை பகுதியாகவும் இடப்பக்கம் குடியிருப்பு பகுதியாகவும் அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலையாக மாற்ற வனத்துறை அனுமதி பெறவும், விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், அதன் அடிப்படையில் பணிகளை பரிசீலனை செய்து வருகிறோம். 7.2 கிலோமீட்டர் சாலை போக்குவரத்து அடர்த்தியின் அடிப்படையில் நான்கு வழிசாலையாக அகலப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்." இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.












Click it and Unblock the Notifications