'சல்யூட்'.. உலக சாதனை படைத்த சென்னை அரசு மருத்துவமனை.. இப்படி நடக்குமா? அசத்தி காட்டிய நம் டாக்டர்கள்
மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்
சென்னை: சென்னையில் ஒரே நேரத்தில் தொடர்ந்து 6 முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சி இல்லாதது, துரித உணவுகள், போதிய அளவு தூக்கம் இல்லாதது போன்றவை மாரடைப்புக்கான முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் 50 வயதுக்கும் அதிகமாக இருந்தவர்களுக்கு வந்த மாரடைப்பு தற்போது இளம் வயதினரை அதிகம் பலி கேட்கிறது. இந்நிலையில் சென்னையில் 36 வயது ஆசிரியர் ஒருவரை ஒரே நேரத்தில் 6 முறை மாரடைப்பு தாக்கியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பொருளியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர்தான் ராஜேஷ். இவருக்கு சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டமாகும். சென்யைில் வேலை கிடைத்ததால் இங்கே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அவர், வகுப்பு எடுக்க குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென லேசாக மயக்கம் வருவதை போல உணர்ந்திருக்கிறார்.

நெஞ்சு வலி
கை, கால்கள் என உடல் முழுவதும் வியர்த்து கொட்டியிருக்கிறது. தண்ணீர் குடித்ததும் இந்நிலை சரியாகவில்லை. பின்னர் லேசான நெஞ்சு வலியும் தொடங்கியுள்ளது. ராஜேஷ் நிலை குலைவதை பார்த்த மற்ற ஆசிரியர்கள் அவரை ஃபேனுக்கு அருகில் அமரவைத்து என்ன ஆயிற்று என்று கேட்டுள்ளனர். நெஞ்சு வலி என்று அவர் சொன்னதும் உடனடியாக பக்கத்தில் இருந்த சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நெஞ்சு வலி குறையவில்லை. எனவே, அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துமனைக்கு ராஜேஷ் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

பரிசோதனை
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதய துடிப்பு முற்றிலுமாக நின்று போய் உள்ளது எனக் கூறியுள்ளனர். இருப்பினும் நம்பிக்கையை கைவிடாமல் Resuscitation எனப்படும் சிகிச்சையை நெஞ்சு வலி சிகிச்சை மைய மருத்துவர் கொடுத்திருக்கின்றனர். சுமார் 1 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் ராஜேஷ் கண் முழித்து பார்த்திருக்கிறார். அதன்பின்னர்தான் மருத்துவர்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை. ராஜேசுக்கு மீண்டும் இதேபோல நெஞ்சு வலி வந்திருக்கிறது.

மீண்டும் மீண்டும்
இதனை எதிர்பார்க்காத மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சையை தொடங்கினர். இந்த முறை எங்கு அடைப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த அடைப்பை நீக்கி ஸ்டென்ட் கருவி பொருத்தினர். ஆனாலும் மாரடைப்பு நிற்கவில்லை. காலை 8.30 மணிக்கு தொடர்ந்த மாரடைப்பு பகல் 11.15 மணி வரை நீடித்திருக்கிறது. இந்த 2.45 மணி நேரத்தில் சுமார் 6 முறை ராஜேசுக்கு மாரடைப்பு வந்திருக்கிறது. இந்த 6 முறையும் மருத்துவர்கள் விடாமல் போராடி அவரை மீட்டிருக்கின்றனர். இது குறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் டீன் தேரணி ராஜன் கூறுகையில்,

அபாய கட்டம்
"சர்வதேச அளவில் இதுவரை 3 முறை மாரடைப்பு வந்தவர்களை மட்டுமே மருத்துவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் தற்போது 6 முறை மாரடைப்பு வந்தவர்களை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியிருப்பது பெரிய சாதனை. இந்த சாதனை குறித்து ஆய்வு கட்டுரை வெளியிடப்படும். உயிரை காக்க மரு்ததுவர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார். தற்போது ராஜேஷ் அபாய கட்டத்தைவிட்டு தாண்டிவிட்டார். மாரடைப்பு ஏற்பட்டு மூன்றாவது நாளில் நல்ல உடல்நலத்துடன் தேறிவிட்டார்.

கோல்டன் டைம்
இன்னும் ஓரிரு தினங்களில் மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு 30 நிமிடங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான் அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர் கூறியுள்ளனர். இப்படி 30 நிமிடங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications