கோபப் பார்வை.. முதல்வர் ஸ்டாலின் விசிட் முடிந்து வந்ததுமே 4 அதிகாரிகள் மீது அதிரடி ஆக்ஷன்! பரபர!
சென்னை : முதல்வர் ஸ்டாலினின் கள ஆய்வுக்குப் பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம் நகர டி.எஸ்.பி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

ஸ்டாலின் ஸ்பாட் விசிட் : வேலூர், சேலம், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இதுவரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கடந்த 26, 27ஆம் தேதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், பணிகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு சென்று சேர்கின்றனவா என்பது குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள், மீனவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தொழில்துறையினருடனும் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மூன்று மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அதிரடி நடவடிக்கை : இந்நிலையில், தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் என்பதும், முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்விற்கு பிறகு பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆய்வு முடிந்ததுமே ஆக்ஷன் : மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வுக்குச் சென்று திரும்பியதுமே அந்த மாவட்டங்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வுக்குப் பிறகுய் 4 முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications