"ஆளுநர் செயல்பாடு மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது”.. சட்டசபையில் சொன்ன துரைமுருகன்
சென்னை: "அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்; ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை; முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார்" என அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் சட்டபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சட்டசபைக்கு வந்திருந்தார். ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய உடன் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி உடனடியாக வெளியேறினார்.

சபாநாயகர் அப்பாவு வாசித்தார்
இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிக்கத் தொடங்கினார். "பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சி என்பது அதன் மனித வள மேம்பாட்டு குறியீடுகளிலும் பிரதிபலிக்கிறது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சி அடைவதும் மருத்துவம் கல்வி மற்றும் சமூக நலனும் மேம்படுத்துவதில் நாட்டிற்கு முன்னாடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது." என தொடர்ந்து வாசித்தார் அப்பாவு.
"சீரிய வழியில் முதலமைச்சர் அவர்களும் எதிர்கால தலைமுறை வாழ்வு தரும் செம்மையாக வடிவமைப்பு தேடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த அரசின் தலைசிறந்த திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மகளிர் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்துள்ளது." என சபாநாயர் அப்பாவு தெரிவித்தார்.
துரைமுருகன் பேச்சு
அதன் பிறகு அவை முன்னவர் எழுந்து துரைமுருகன் பேசுகையில், "அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை.
மற்ற சில மாநிலங்களைப் போல ஆளுநர் உரையை தவிர்த்தும், நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கலாம். எனினும், கலைஞரின் வழியில் அவை மரபை மீறக்கூடாது என்று முதலமைச்சர் முடிவெடுத்தார்.
ஆனால், முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாகப் படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார்; ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார்.
ஆளுநர் உள்நோக்கம்
தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது. தமிழ்நாடு பேரவை மரபுப் படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடுவதே வழக்கம். ஆளுநரின் செயல்பாடு மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது; 2023 ஆம் ஆண்டிலேயே தமிழக அரசின் உரையில் சில வார்த்தைகளை புறக்கணித்தார் ஆளுநர். ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்று மட்டும் தான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது." என்றார்.
மேலும், ஆளுநர் உரையில் அச்சிடப்பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. அலுவல் ஆய்வுக்குழு இன்று மாலை கூடி, எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும்.












Click it and Unblock the Notifications