ஆளுநர் சந்தித்தவர் தியாகியே இல்லை! வெடிக்கும் கீழ்வெண்மணி சர்ச்சை!
சென்னை: கீழ்வெண்மணி விசிட் மூலம் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கிறார் ஆளுநர் ஆர் என் ரவி.
தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, கடந்த 28 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். அப்போது அவர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

மேலும் சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திடீரென்று அம்மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணிக்கு சென்றிருந்தார். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகர், பட்டியலினத்தவர் வசிக்கும் ஜீவா நகர் மக்களுடன் கலந்துரையாடினார்.
கீழ்வெண்மணி நிலக்கிழார்களால் விவசாயத் தொழிலாளிகள் உயிரோடு எரிக்கப்பட்டு மாபெரும் கொடுமை நடந்த கிராமம் இது.
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக இன்றுவரை அது உள்ளது. அந்தப்போராட்டத்தை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் ஆளுநர் ரவி அங்கே சென்றார். அங்குத் தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினார். அது குறித்து ஆளுநர் ரவி அவரது எக்ஸ் தளத்தில், ""நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான தி ஜி. பழனிவேலை சந்தித்தேன்.

மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்" என்று பதிவிட்டிருந்தார்.
ஊடகங்களில் கீழ்வெண்மணிக்கு ஆளுநர் சென்றது திடீர் விசிட் என்றே சொல்லப்பட்டது. ஆனால், அதை மறுக்கிறார் அந்த ஊர்வாசியான சுப்பிரமணி. மேலும் பழனிவேல் என்பவர் தியாகியே இல்லை என்கிறார்.
இதனால் இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளது. இந்தச் சர்ச்சை குறித்தும் ஆளுநர் வருகை குறித்து தமிழ்நாடு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, "ஆளுநர் ஆர்.என்.ரவி, தியாகி பழனிவேலைப் பார்ப்பதற்காக வருவதாகச் சொன்னார்கள். அவர் பார்க்க வந்த தியாகி வசதியாகத்தான் இருக்கிறார்.

அவரது வீட்டில் கார், மற்ற எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவரது குழந்தைகள் கப்பற்படை, ராணுவத்தில் வேலை பார்க்கிறார்கள். ஆகவே, அவருக்கு எந்தக் குறைகளும் இல்லை.
அவர் வீடு வேறு தெருவில் உள்ளது. ஆளுநர் வந்த தெருவுக்கும் தியாகி வாழும் தெருவுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், அங்கே போகாமல் ஆளுநர் குடிசைப் பகுதிகள் உள்ள பகுதிக்கு வருகை தந்தார்.
தமிழ் சேவா சங்கம் தான் ஆளுநர் வருகைக்கு ஏற்பாடு செய்தது. இது ஊர் மக்களுக்குத் தெரியாது. ஆளுநர் வருகைக்கான வேலைகள் நடந்தன. ஆனால், அது வெளிப்படையாக சொல்லப்படவில்லை.

இந்தச் சங்கம் என்ன சொன்னது என்னவென்றால், நாங்கள் கிராமம் தோறும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம். ஆகவே, இங்கே வந்து பார்வையிடுகிறோம் என்றுதான் கீழ்வெண்மணி கிராமத்திற்குள் வந்தார்கள்.
எனவே அதைப் பார்வையிட வசதி இல்லாத மூன்று வீடுகளைத் தேர்வு செய்துள்ளோம். அதை ஆளுநர் ஆய்வு செய்வார் என்று சொன்னார்கள்.
இந்த வீடுகள் கட்டித்தரப் போகும் நிகழ்ச்சி மட்டும்தான் வெளிப்படையாகச் சொன்னார்கள். ஆனால், அதில் தியாகி பழனிவேல் கலந்துகொள்வதாகச் செய்தியே இல்லை. திடீரென்று அவர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.

இதில் 3 நாள்களாகவே கவர்னர் வரப்போவதாகச் சொல்லி போலீஸ் வேறு அடிக்கடி வந்து ஒரே பரபரப்பு. கேட்டால் ஒத்திகை பார்க்கிறோம். ஆளுநர் வரப்போகிறார் என்றார்கள். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலை ஆறு மணிக்கே பொது சாலைக்குக் கருப்புக் கொடியுடன் கம்யூனிஸ்ட்கள் வந்துவிட்டார்கள். அவர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்து மண்டபத்தில் வைத்து விட்டார்கள்.
இதனால் கிராமமே பதற்றமாகி, ஆளுநர் வரும்போது யாரும் இல்லாத அளவுக்கு ஊர் வெறிச்சோடி போய்விட்டது. 1500 குடும்பங்கள் உள்ள ஊரில் அவர் வரும்போது கூட்டமே இல்லை. இதுதான் உண்மை" என்கிறார்
அவரிடம் ஊருக்கு ஆளுநர் வருகை திடீர் ஏற்பாடுதான். அவர் இங்கே தற்செயலாக வந்தார் எனச் சொல்லப்படுவது உண்மை இல்லையா? என்றதற்கு, "இல்லை. அது 3 நாள்கள் முன்பே திட்டமிட்ட நிகழ்ச்சிதான். அதில் சந்தேகம் இல்லை.

பழனிவேல் வீட்டைத் தாண்டிதான் நிலச்சுவான்தார்கள் பட்டியலின மக்கள் வீடுகளை எரித்தார்கள். அதில் முதல் வீடு பழனிவேல் இருந்த வீடுதான். அவர் வீட்டிற்கு எந்தச் சேதமும் இல்லை. ஆனால், அவரைத் தியாகி என்கிறார்கள். உண்மையில் எரிந்த 40 குடும்பங்களைத் தியாகிப் பட்டியலில் சேர்க்கவில்லை. அவர்களைத்தான் ஆளுநர் போய் பார்க்க வேண்டும்.
5வயதில் நான் பாதிக்கப்பட்டேன். என் அப்பா, அம்மா பாதிக்கப்பட்டனர். என் வீடு பாதிக்கப்பட்டது. அதை எல்லாம் மீறி பழனிவேலை ஆளுநர் தியாகி என்கிறார். அது மக்கள் மத்தியில் வெறுப்பைக் கிளப்பி உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யாமல், வெறும் பங்களா போல் ஸ்தூபியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். வெறும் குடிசைகள் மத்தியில் இந்தப் பங்களா தேவையா என ஆளுநர் கூடச் சொன்னார்.
மறைமுகமாகக் கம்யூனிஸ்ட் அட்சியைத்தான் அவர் விமர்சித்திருக்கிறார். அதை உணர்ந்துதான் நேற்றுதான் ஆட்சியர் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தரக் கணக்கு எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
உண்மையில் இந்த மக்களுக்குச் செய்ய வேண்டும் என ஆளுநருக்கு மனம் இருந்திருந்தால் அவர் கடந்த 2 ஆண்டுகள் முன்பே வந்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நேரத்தில் அவர் இங்கே வருகிறார்.
எப்படி கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வெண்மணியை வைத்து அரசியல் லாபம் அடைகிறதோ அதையேதான் ஆளுநரும் செய்கிறார். அதனால்தான் பாதிக்கப்பட்ட பொதுமக்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம்" என்கிறார்












Click it and Unblock the Notifications